• Tue. Apr 30th, 2024

ரூ100 கோடி கேட்டு அண்ணாமலைக்கு தி.மு.க நோட்டீஸ்

துபாய் எக்ஸ்போ 2022 -ல் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் 5 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார்.
நேற்று எக்ஸ்போவை பார்வையிட்ட அவர், இன்று ஐக்கிய அமீரக முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். அவர்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் 5 ஆயிரம் கோடி ரூபாயை துபாய்க்கு கொண்டு சென்றுள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார். துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்துவைக்க ஏன் இவ்வளவு பணம்? துபாய் பயணத்தின் மர்மம் என்ன? சொந்த முதலீட்டை செய்வதற்காக திமுக இந்த பயணத்தை மேற்கொள்கிறதா? என கேள்விகளை அடுக்கியிருந்தார்.

இந்நிலையில், முதல்வரின் இந்தப் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமால் அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் இன்று அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள நோட்டீசில், ‘ திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022-ல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும், உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள்.

முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது. முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.

இதற்காக நீங்கள் பொது வெளியில் 24 மணி நேரத்திற்குள் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லையென்றால், உங்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்.
அதேபோல், நஷ்ட ஈடாக ரூ.100 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்… துணிவுடன். மக்கள் துணையுடன்… என தெரிவித்துள்ளார்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *