• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நெல்லையில் குலுக்கல் முறையில் அதிமுகவை வீழ்த்தி மலர்ந்த தாமரை.!

நெல்லை மாவட்டம், பனகுடி பேரூராட்சி 4ஆவது வார்டில் அதிமுகவை குலுக்கல் முறையில் பாஜக வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்ரில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் நெல்லை மாவட்டம் பனகுடி பேரூராட்சியில் 4 ஆவது வார்டில் வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவும் பாஜகவும் ஒரே அளவிலான வாக்குகளை பெற்றது.

அதாவது இரு கட்சிகளுமே தலா 266 வாக்குகளை பெற்றது. இதையடுத்து தேர்தல் ஆணைய விதிகளின் படி இரு வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றிருந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் வேட்பாளர்களிடம் தெரிவித்துவிட்டு குலுக்கல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதல் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்து வந்தது. இதையடுத்து நடந்த சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் இரு கட்சிகளும் கூட்டணியில் இருந்தன. அதிமுகவை பாஜக பல முறை கடுமையாக விமர்சித்திருந்தாலும் அதை அதிமுக பெரிதாக பொருட்படுத்தாவிட்டாலும் நாவடக்கம் தேவை என எச்சரிக்கை விடுத்து வந்தது.
இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து இரு தரப்பினரும் சாதகமான பதிலையே சொல்லி வந்தனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பாஜக அதிமுக இடங்களில் அதிமுகவிடம் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் இது முக்கியமான உள்ளாட்சி தேர்தல் என்பதால் அதிக இடங்களில் போட்டியிட அதிமுக விரும்பியது. இதனால் அள்ளி கொடுக்க முடியாது, கிள்ளிதான் கொடுப்போம் என அதிமுக சொல்லியது. இந்த பேச்சுவார்த்தை அடுத்த நாளும் தொடரும் என பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்த சில நிமிடங்களில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பாஜகவுக்கு ஷாக் கொடுத்தது.
இதையடுத்து பாஜகவும் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது. அந்த வகையில் அதிமுகவும் பாஜகவும் பனகுடி பேரூராட்சியில் ஒரே வாக்குகளை பெற்ற போதிலும் குலுக்கல் முறையில் அதிமுகவை பாஜக வென்றது. அது போல் திண்டுக்கல் மாநகராட்சியில் 1 வார்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாஜகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் பாஜகவுக்கு மக்கள் எந்த அளவுக்கு இடம் கொடுக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என்பதால் பாஜக இதை முக்கிய தேர்தலாகவே பார்க்கிறது.