• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

தேனியில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; விபத்தில் 3 பேர் பலி

ஆண்டிபட்டி அருகே வேன் மற்றும் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 3 பேர் பலியாயினர். படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம், செக்காணூரனியை சேர்ந்த 4 பேர் ஒரு காரில் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அதே காரில் மீண்டும் செக்காணுரனி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். காரை மதுரை அருகேயுள்ள நாகமலைப்புதுக்கோட்டையை சேர்ந்த முருகபிரபு (44), என்பவர் ஓட்டினார். நேற்று மாலை சுமார் 5.10 மணியளவில் ஆண்டிபட்டி அடுத்து கணவாய் பகுதியில் திம்மரசநாயக்கனூர் விலக்கு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஒரு கார் மீது மோதி, அதற்கு பின்னால் மதுரையில் இருந்து கேரளா நோக்கி சென்ற சுற்றுலா வேனுடன் நேருக்கு நேர் மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த விபத்தால் கார் மற்றும் வேனில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்து கூச்சலிட்டனர். இந்த விபத்தில் இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கின. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த முருகபிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், அதே காரில் பயணித்த செக்காணூரனியை சேர்ந்த சிவபாண்டி(48), செல்வம்(55) ஆகியோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். அதே காரில் பயணம் செய்த மற்றொரு நபரான செக்காணூரனியை சேர்ந்த பாண்டியராஜன்(44) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிலர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக தேனி-மதுரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. ஆண்டிபட்டி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.