• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஜெடையலிங்கா சுவாமி கோவிலில் குண்டம் திருவிழா!

கோத்தகிரி அரவேனு அருகே உள்ள ஜக்கனாரை கிராமத்தில் ஜெடைய லிங்கா சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவில் சுற்றுவட்டார 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்பது வழக்கம். குண்டம் திருவிழாவுக்கு விறகை பயன்படுத்தக் கடந்த நவம்பர் மாதத்தில் ஜக்கனாரை ஊர்ப்பிரமுகர்கள் ஜெடையலிங்க சுவாமி கோவிலுக்குச் சென்று, வளாகத்தில் வளர்ந்து இருந்த நகா மரத்தை வெட்டி, பூக்குண்டத்திற்கு பயன்படுத்தக் காய வைத்துவிட்டு வந்தனர்.  பின்னர் குண்டம் இறங்க கோவில் பூசாரி உள்பட பக்தர்கள் பலர் விரதம் இருந்தனர். தொடர்ந்து குண்டம் திருவிழா நடத்த கடவுளின் அனுமதி பெற்று கிராமத்தில் உள்ள தெவ்வமனை ஹிரியோடையா கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.  

கடந்த புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை 8 ஊர்களுக்கு சாமி வீதியாக உலா சென்று வீடு, வீடாகப் பூஜைகள் செய்யப்பட்டன. திருவிழா வின் முக்கிய நாளான நேற்று ஜெடையலிங்கா சுவாமி கோவில் மற்றும் அதன் அருகே உள்ள ரங்கநாதர் கோவிலுக்கு விரதம் இருந்து வந்த பக்தர்கள் சென்று சிறப்புப் பூஜை செய்தனர்.  தொடர்ந்து குண்டம் இறங்க அமைக்கப்பட்ட இடத்தில் நகா மரத்தின் விறகுகளை போட்டுத் தயார் செய்தனர். தீ மூட்ட தீப்பெட்டி பயன்படுத்துவது இ்ல்லை மாறாகக் குரும்பர் இன மக்கள் கோவிலுக்கு வந்து, கற்களை உரசி நெருப்பை மூட்டி குண்டத்தை தயார் செய்தனர்.  பின்னர் குரும்பர் இன மக்கள் தங்களது பாரம்பரிய இசை கருவிகளை வாசித்துப் பூஜைகள் செய்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் 2.30 மணிக்குக் குண்டம் இறங்க பக்தர்கள் தயாராக இருந்தனர்.  அப்போது சீதோஷ்ண நிலை மாறிப் பலத்த காற்று வீசினால் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி கிடைக்கும் என்று காத்திருந்தனர். அப்போது காற்று வீசியது. இதையடுத்து முதலில் பூசாரியும், தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்களும் குண்டத்தில் தீ மிதித்துத் தங்கள் வேண்டுதலை நிறைவு செய்தனர். மேலும் இந்தத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.\