• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? மதரீதியாக பிளவுபட்டதா? – ஐகோர்ட் கேள்வி

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா அல்லது மதரீதியாக பிளவுபட்டதா என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், நாட்டில் ஹிஜாப் அணிவதற்காகவும், கோயில்களில் வேட்டி கட்டுவதற்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கடந்த 1947-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம், 1972-ல் ரத்து செய்த போதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, கோயிலின் நுழைவு வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அந்த விளம்பரப் பலகையில் கோயிலுக்கு வரும் போது இது போன்ற ஆடைகள் அணிந்து வரவேண்டும் என்று விளம்பரப்பலகையில் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், கோயில்களுக்கு வருபவர்கள் மரபுப்படி உடை அணிந்து வர வேண்டும். தஞ்சை, மதுரை போன்ற கோயில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, டவுசர் அணிந்து வருகின்றனர். கோயில்களுக்குள் வெளிநாட்டவர்களை அனுமதிக்க கூடாது என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், பல கோயில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுவதாக சுட்டிக்காட்டினர். நாட்டில் ஹிஜாப் அணிவதற்காகவும், கோயில்களில் வேட்டி கட்டுவதற்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா அல்லது மத ரிதியாக பிளவுபட்டதா என கேள்வி எழுப்பினர்?
மேலும், அனைத்து கோயில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா? , ஆகம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது ?, குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என மரபு உள்ளதா? எந்த கோயிலில் உள்ளது எனவும் கேள்வி எழுப்பினர். அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார்கள் உள்ளதா? , ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் ரத்து செய்ததாகவும், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடாது. மனுதாரரின் கோரிக்கை மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றதாக உள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.