• Tue. Apr 30th, 2024

பல வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க உள்ளேன் – நிதி அமைச்சர்

Byகுமார்

Feb 9, 2022

தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி வார்டு எண் 57- ல் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இந்திராணி என்பவரை ஆதரித்து ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் வேன் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர் கூறுகையில், ‘ஒரு தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியமானவர் கவுன்சிலர். தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சி இந்தியாவை விட வளர்ந்த நாடுகளை விட குறைவாகவே உள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சி மறுவரையறையில் குளறுபடி இருப்பதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் நாடியுள்ளேன். அதற்குள்ளாகவே தேர்தல் நடத்தப்படுகிறது.

இருப்பினும் இதில் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது வரவேற்க தக்கது. பெண்களுக்கு கல்வி, அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவைகளில் வாய்ப்பளிக்கும் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும்.

மதுரைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் எந்த குறையும் இல்லாமல் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யபடும். இருமுறை மத்திய தொகுதியில் ஒரு ரூபாய் பண பட்டுவாடா இல்லாமல் வெற்றி பெற வைத்த மக்களுக்கும், தமிழக மக்களுக்கு வரும் நிதி நிலை அறிக்கையில் 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பல்வேறு எதிர்கால வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க உள்ளேன்.

அன்னை மீனாட்சி அருளால் எனக்கு இந்த பொறுப்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு கவுன்சிலரும் திமுக கவுன்சிலராக இருந்தால் நாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்வதற்கும் அவர்களை தட்டிக் கேட்பதற்கும் சரியாக இருக்கும். பணம் இன்று வரும்., நாளை காணாமல் போகும்., மக்கள் பணி செய்யும் வேட்பாளருக்கு வாய்ப்பளிப்பது வாக்காளர்களின் கடமையே!’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *