• Tue. Apr 30th, 2024

தேனி: தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு
ஊர்வலம்: உறுதிமொழி

தமிழகத்தில் ஜன., 30 முதல் பிப்., 13ம் தேதி வரை, தொழுநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், பிப்., 2ம் தேதி, காலை 10 மணியளவில், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தலைமையில், டாக்டர்கள் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் மருத்துவமனை வளாகத்திற்குள் ஊர்வலமாக சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியபடி, கோஷமிட்டு சென்றனர். பின்னர் தொழுநோய் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர்.
முதல்வர், பாலாஜி நாதன் பேசுகையில், ” தொழுநோய் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை நாட வேண்டும். மாணவிகள் அவர்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தொழுநோயினால் ஏற்படும் பாதிப்பு, அவற்றில் இருந்து நாம் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும்” என்றார். தொழுநோயாளிகளுக்கு ஊன்றுகோல், காலணி, மருத்துவ பொருட்கள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் எழிலரசன், மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோ, துணை இயக்குனர் (தொழுநோய் பிரிவு) ரூபன்ராஜ், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் முருகமணி, ஜனார்த்தன், சுப்பிரமணி உட்பட டாக்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் செவிலியர் மாணவிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *