அமமுக நிர்வாகி ஒருவர் இரண்டு நாட்களில் இரண்டு கட்சிக்கு தாவிய செய்தி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகளில் நிர்வாகிகள் கருத்து வேறுபாடு காரணமாக, அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வுதான். அப்படி ஒருவர் கட்சி தாவினாலும் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவதற்கு இடையே ஒரு கால இடைவெளி என்பது இருக்கும். ஆனால், அமமுக நிர்வாகி ஒருவர் இரண்டு நாட்களில் வேறு வேறு கட்சிக்கு தாவியுள்ளார்.
அ.ம.மு.க தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் நீலாங்கரை எம்.சி. முனுசாமி. இவர் கடந்த ஜனவரி 29ம் தேதி தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியே சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
இதையடுத்து, அவர் இரண்டாவது நாளான நேற்று (ஜன31) தமிழக பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நீலாங்கரை எம்.சி. முனுசாமி தன்னை இணைத்துக் கொண்டார்.
இப்படி, அ.ம.மு.க.வில் இருந்த நீலாங்கரை எம்.சி.முனுசாமி ஜனவரி 29ம் தேதி அதிமுகவில் சேர்ந்தார். அவர் அதிமுகவில் சேர்ந்த அடுத்த இரண்டு நாட்களில் ஜனவரி 31ம் தேதி பாஜகவுக்கு தாவியுள்ளார். அ.ம.முக தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் இரண்டு நாட்களில் அதிமுக, பாஜக என இரண்டு கட்சிகளுக்கு தாவியது தமிழக அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாளில் கூட்டணிக் கட்சிக்குள்ளேயே தாவிய அ.ம.மு.க நிர்வாகி!
