• Tue. Apr 30th, 2024

மத்திய பட்ஜெட் முறையின் வரலாறு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (இன்று) பிப்., 1ம் தேதி, 2022 – 23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் நான்காவது மத்திய பட்ஜெட்டாகும்.

இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையானது பிரிட்டிஷ் ஆட்சிக் காலமான, 1860ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்காட்டிஷ் பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட், 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்றே, அப்போதைய நிதித்துறை அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியால் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் உரையின் நேரம்!
நிர்மலா சீதாராமன், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டின் உரை 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நீடித்தது. பட்ஜெட் உரையின் நிறைவில், இன்னும் 2 பக்கங்கள் பாக்கியிருந்த நிலையில், தொடர்ந்து பேச இயலாமல், உரையை சுருக்கமாக நிறைவு செய்தார். விடுபட்ட பக்கங்களை படித்ததாகக் கருத்தில் கொள்ளுமாறு அவைத் தலைவரைக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு முன்பு, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் தாக்கல் செய்த முதல் மத்திய பட்ஜெட் உரை 2 மணி நேரம் 17 நிமிடங்கள் நீடித்தது தான் சாதனையாக இருந்தது. 2020 பட்ஜெட் உரையின் மூலம் நிர்மலா சீதாராமன் தனது சாதனையை தானே முறியடித்தார்.

மிகக் குறுகிய பட்ஜெட் உரை
1977ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ஹிருபாய் முல்ஜிபாய் பட்டேல் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரைதான் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட உரைகளில் மிகக் குறுகிய உரையாகும். இதில் சரியாக 800 வார்த்தைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. அதிக வார்த்தைகள் கொண்ட பட்ஜெட்டாக, நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியின்போது, நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 18,650 வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. அதற்கு பின்பு, 2018ஆம் ஆண்டு அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் 18,604 வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இதனை அவர் 1 மணி நேரம், 49 நிமிடங்கள் வாசித்தார்.

அதிக பட்ஜெட்களை தாக்கல் செய்தவர்
நாட்டின் வரலாற்றில் அதிக பட்ஜெட்களை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை வைத்திருப்பவர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய். 1962 – 69ஆம் ஆண்டு வரை மத்திய நிதியமைச்சராக இருந்து 10 மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார். இதற்கு அடுத்தடுத்த இடங்களில், ப. சிதம்பரம் (9), பிரணாப் முகர்ஜி (8), யஷ்வநத் சின்ஹா (8), மன்மோகன் சிங் (6) ஆகியோர் உள்ளனர்.

பட்ஜெட் நேரம்
1999ஆம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட் என்றால், பிரிட்டீஷ் ஆட்சியினர் பின்பற்றிய முறைப்படி, பிப்ரவரி மாதம் கடைசி நாளன்று மாலை 5 மணிக்குத் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, 1999ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை முற்பகல் 11 மணி என மாற்றினார். அதனைதொடந்து, காலணி ஆதிக்க முறையில் பிப்ரவரி கடைசி நாளன்று பட்ஜெட் தாக்கல் செய்வது என்ற முறையையும் மாற்றி, 2017ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லீ, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

மொழிகள்
1955ஆம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட் ஆங்கில மொழியில் மட்டுமே அச்சடிக்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய பட்ஜெட் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என இருமொழிகளில் அச்சடிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *