• Tue. Apr 30th, 2024

ஆக்கிரமிப்பின் பிடியில் பழைய பஸ் ஸ்டாண்ட்: உயிர் பயத்தில் பயணிகள்

தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் வாகன நெரிசலால் பெரும் விபத்து ஏற்படும் முன், இங்கு ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்டம், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பழைய பஸ் ஸ்டாண்ட். ஒரு காலத்தில் காமராஜர் பஸ் நிலையம் என்றழைக்கப்பட்டது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமான இந்த பஸ் ஸ்டாண்டில் 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் நகராட்சிக்கு வருவாய் கிடைத்து வருகிறது. வருவாயை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்டின் அவலநிலை குறித்து கவலைப்படுவதில்லை.

மூன்று ஏக்கருக்கும் அதிகமாக பரந்து, விரிந்து காணப்பட்ட பஸ் ஸ்டாண்ட், காலப்போக்கில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சுருங்கி காணப்படுகிறது. தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து போடி, மூணாறு, வீரபாண்டி, சின்னமனூர், கம்பம், குமுளி, போன்ற பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பெரும்பாலான டவுன், விரைவு பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றன. இதனால் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் இங்கு அதிகரித்து வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் கடை நடத்தி வருபவர்கள், தங்கள் இஷ்டம் போல் கடைக்கு முன்பாக ‘ஷெட்’ (கூடாரம்) அமைத்துள்ளதால் பயணிகள் நிற்க கூட வசதி இல்லாமல் வெயிலில் காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர பஸ் வெளியே செல்லும் இடத்தில் நடை பாதை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு ரோட்டின் ஓரத்தில் தள்ளுவண்டிகளை வரிசையாக நிறுத்தி பழக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதில் சிக்கல் ஏற்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை என புலம்பி வருகின்றனர். காரணம், நகராட்சி அதிகாரிகளை நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் சாலையோர தள்ளுவண்டி கடைக்காரர்கள் அவ்வபோது ‘மாமூல்’ கொடுத்து சரிகட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எது எப்படியோ, பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பெரும் விபத்து தவிர்க்கப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *