• Tue. Apr 30th, 2024

கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்து வாபஸ் பெற்ற ஜெ.,அரசு

தமிழகத்தில் மீண்டும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிறது பாஜக. ஆனால் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்த அதிமுகவுக்கு 2004 லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் தோல்வியைத்தான் கொடுத்தார்கள் என்பது வரலாறு.
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை முன்வைத்து கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்கிற பாஜக. தமிழகத்தில் கட்டாய மதமாற்றங்களே நடைபெறவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவாரா? என கேள்வி எழுப்புகிறது பாஜக.

அரியலூர் மாணவி கொடுத்ததாக சொல்லப்படும் மரண வாக்குமூலத்தில் கட்டாய மதமாற்றம் என்கிற சொல்லே இல்லை. ஆனால் பாஜக தரப்பு இதனை முன்வைத்து போராட்டங்களை நடத்துகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகம், ஏற்கனவே கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்தி பின்னர் திரும்பப் பெற்றது என்பது வரலாறு.

தமிழகத்தில் 002ஆம் ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 2003-ம் ஆண்டு போப் ஆண்டவர், கட்டாய மதமாற்ற தடை சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதில் தந்த ஜெயலலிதா, போப்புக்கு எந்தவிதமான அதிகாரமும் உரிமையும் கிடையாது என்றார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பெரியாரின் கொள்கைப்படி, அண்ணாவின் கொள்கைப்படி கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல, அவரவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மதம் மாறினால் கூட அவர்கள் மதம் மாறியதாகக் கூறி தண்டிக்கப்பட நேரிடும், எனவே அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

மேலும் தமிழக அரசின் மத மாற்றத் தடைச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சிறுபான்மையினர் அனைத்துக் கட்சி கண்டன மாநாடு நடத்தினர். தமிழக சட்டசபையில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா மீது 31-10-2002 அன்று விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தன. ஆனாலும் பெரும்பான்மையுடன் இருந்த அதிமுக அரசு இம்மசோதாவை நிறைவேற்றியது.
தேர்தலில் அதிமுகவுக்கு படுதோல்வி- சட்டம் ரத்து

2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஜெயலலிதாவின் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் முக்கிய இடம்பிடித்தது. இத்தேர்தலில் 39 தொகுதிகளையும் திமுக-காங்கிரஸ்-பாமக-மதிமுக-இடதுசாரிகள் இணைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியது. அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத அளவுக்கு படுதோல்வியைச் சந்தித்தது. இதனையடுத்து 18-5-2004-ல் அவசரச் சட்டத்தின் வாயிலாக கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அதே ஜெயலலிதாவே ரத்து செய்தார். பின்னர் 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடு கட்டாய மத மாற்றத் தடை (நீக்க) சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டு 31-5-2006-ல் அந்தச் சட்ட முன் வடிவு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடை சட்டம் என்கிற அத்தியாயமே முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *