• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களுக்கு மீண்டும் வீட்டு காவல்

கடந்த 2019ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு அங்குள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் அடைக்கப்பட்டனர். இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். வீட்டு காவலில் வைக்கப்படும் கால அளவு குறித்து உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பியது.

கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து உமர் அப்துல்லாவும் 14 மாதங்களுக்கு பிறகு முப்தியும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைக்கும் வகையிலும் தனி தொகுதிகளை வரையறைக்கும் நோக்கிலும் தொகுதி மறு சீரமைப்பு ஆணையம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. அதன்படி, ஜம்முவுக்கு கூடுதலாக 6 தொகுதிகளையும் காஷ்மீருக்கு கூடுதலாக ஒரு தொகுதியையும் ஒதுக்கி ஆணையம் பரிந்துரை செய்தது. இது மக்கள் தொகை விகிதத்திற்கு எதிராக உள்ளது எனக் கூறி பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. அந்த வகையில், ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என குப்கர் கூட்டணி (தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்பட பல அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு) அறிவிப்பு வெளியிட்டது.


இதை தடுக்கும் வகையில், முன்னாள் முதல்வர்கள் ஃபருக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் குப்கர் சாலையில் அவர்கள் தங்கிருக்கும் இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு முன்பு பாதுகாப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து வெளியே செல்லவோ உள்ளே வரவோ மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து உமர் அப்துல்லா ட்விட்டர் பக்கததில், “காலை வணக்கம். 2022க்கு வரவேற்கிறோம். புதிய ஆண்டு, இருந்தபோதிலும், ஜம்மு காஷ்மீர் காவல்துறை சட்ட விரோதமாக மக்களை அவர்களின் வீடுகளில் அடைத்து வைத்துள்ளது. சாதாரண ஜனநாயக நடவடிக்கைகளால் மிகவும் பயந்துபோன நிர்வாகம். அமைதியை சீர்குலைப்பதற்காக எங்கள் வாயில்களுக்கு வெளியே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன” என பதிவிட்டுள்ளார்.