தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்ற திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக விளங்கும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில், முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில், பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்களின் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கங்களுக்கு மத்தியில் சரியாக மாலை 5 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
பல நாட்களாக நீடித்து வந்த சட்டப் போராட்டங்கள், நீதிமன்ற விசாரணைகள், அரசுத் தரப்பு விளக்கங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் எனப் பல்வேறு கட்டங்களைக் கடந்து, இறுதியாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்ட சம்பவம் திருப்பரங்குன்றம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூனில் தீபம் ஏற்றிய நிகழ்வு அவ்வளவு எளிதாக நடைபெறவில்லை.
இதன் பின்னணியில் நடைபெற்ற சட்ட போராட்டங்களை பார்த்தால்தான் தீபம் ஏற்றிய விவகாரங்களுக்கு முழு விவரம் தெரிய வரும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரி நடைபெற்ற சட்டப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கடந்த நவம்பர் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24ஆம் தேதி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதிய மாவட்ட நிர்வாகம், மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் திருப்பரங்குன்றம் மட்டுமின்றி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பான சூழல் நிலவியது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மறுபுறம், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் அந்த உத்தரவை முறையாகச் செயல்படுத்தவில்லை என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜரானார். அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாகவும், தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் எனப் பக்தர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீபத்தூணிலேயே கோவில் நிர்வாகம் தீபம் ஏற்றியது. அறங்காவலர் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த பாஜகவினர், இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், உச்ச நீதிமன்ற உத்தரவு முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை எனக் குற்றம்சாட்டி கோவில் வாசல் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்ததுடன், சிலரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் நிலைமை சீரானதைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை எனக் கூறி இந்து அமைப்பைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு, மாவட்ட ஆட்சியர் மற்றும் தொல்லியல் துறை தரப்பினரின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் நவம்பர் 28ஆம் தேதியான இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே ஏற்கனவே ஏற்றப்படும் தீபத்தில் இருந்து நெருப்பைப் பெற்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விசாரணையின்போது, திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவையும் உச்ச நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அறங்காவலர் குழு செயல்படக் கூடாது என்றும், கோவில் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்வதற்காக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகிய இருவரையும் நியமித்தும் உத்தரவிட்டது.
மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட 13 அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பவும், வரும் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ள அடுத்தகட்ட விசாரணையில் அவர்கள் நேரில் ஆஜராகவும்உத்தரவிடப்பட்டது. 700-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படையினர் குவிப்பு!
இன்றைய தீபம் ஏற்றும் நிகழ்வின்போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பாக, மலைப்பகுதி மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக காவல்துறையினருக்குப் பதிலாக மத்திய ரிசர்வ் காவல் படையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் நேற்று நள்ளிரவு திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர்.

இன்று அதிகாலை முதலே திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையினரின் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. மலைக்குச் செல்லும் பாதைகள், மலை உச்சி, தீபத்தூண் அமைந்துள்ள பகுதி, கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டன. மலை உச்சிக்குச் செல்லும் கோவில் பணியாளர்கள், பூஜைப் பொருட்களைக் கொண்டு செல்லும் நபர்கள் மற்றும் அனுமதி பெற்ற பக்தர்கள் என அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காகப் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, தீபத்தூண் அமைந்துள்ள பகுதியில் மரக்கட்டைகள் மற்றும் மரப்பலகைகளைக் கொண்டு சாரம் அமைக்கப்பட்டது. தீபத்தூணை அடைவதற்காக மரக்கட்டைகளால் ஏணிகளும் அமைக்கப்பட்டன.
மேலும், தீபம் ஏற்றுவதற்குத் தேவையான நெய், கற்பூரம், மண் கலசங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்னர் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டன. திருவண்ணாமலையில் இருந்து வந்த ஆறு தீப மிராசுகள் தீபம் ஏற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 20 லிட்டர் நெய் உள்ளிட்ட பொருட்களும் தயார் செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தால் கோவில் நிர்வாகப் பொறுப்புக்காக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகிய இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர்.
தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன், மாவட்டக் கண்காணிப்பாளர் வீரராகவ், வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. தீபம் ஏற்றும் நிகழ்வுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தக் குழுவினர் கண்காணிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பக்தர்கள் மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்றும் நிகழ்வைப் பார்க்க அனுமதி இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், கண்காணிப்புக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்ட பக்தர்கள் மட்டுமே மலை உச்சிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்ட முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகிய இருவரும் நேரடியாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்து கோவில் பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து மலை உச்சிக்குச் செல்லும் பாதைகளையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்காகக் கோவில் நிர்வாகத்தால் தயார் செய்யப்பட்ட தீபக் கொப்பரையை இரு முன்னாள் நீதிபதிகளும் கையில் ஏந்தியபடி கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தீபக் கொப்பரை கோவில் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மலை உச்சியில் தீபம் ஏற்றும் நிகழ்வைப் பார்ப்பதற்கு 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
தாங்களும் மலை உச்சிக்குச் சென்று முருகப்பெருமானின் கார்த்திகை மகா தீபத்தைத் தரிசிக்க வேண்டும் எனக் கூறி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், மலைப்பாதையில் பொதுமக்கள் கூட்டமாக நிற்கக் கூடாது என்றும், பாதுகாப்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தீபம் ஏற்றப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா மற்றும் கண்காணிப்புக் குழுவினர் மலை உச்சிக்குச் சென்றனர்.
அங்கு தீபத்தூண் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று தீபம் ஏற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தனர். தீபக் கொப்பரை, நெய், கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் தயாராக உள்ளனவா என்பதையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ளனவா என்பதையும் உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. மலை உச்சி முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், பக்தர்களும் பொதுமக்களும் அடிவாரப் பகுதிகளில் திரண்டு தீபம் ஏற்றும் நிகழ்வை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்தத் தருணம் சரியாக மாலை 5 மணிக்கு வந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகும், முருக பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே ஏற்கனவே ஏற்றப்பட்டிருந்த தீபத்திலிருந்து நெருப்பு எடுத்து வரப்பட்டு, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த முருக பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’, ‘வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என விண்ணதிர பக்தி முழக்கங்களை எழுப்பினர்.
பல நாட்களாக நீடித்து வந்த சட்டப் போராட்டங்கள், நீதிமன்ற உத்தரவுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு கட்டங்களைக் கடந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் பக்தி பரவசமான சூழல் நிலவியது.
மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, அடிவாரத்தில் காத்திருந்த பக்தர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் முருகப்பெருமானை வழிபட்டு பக்தி முழக்கங்களை எழுப்பினர்.
பல நாட்களாகத் தொடர்ந்து வந்த நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்ட சம்பவம் இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.


