• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மாலை அணிந்து மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்த பள்ளி நிர்வாகம்..,

ByKalamegam Viswanathan

Nov 26, 2026

மதுரை நாகமலை புதுக்கோட்டை பில்லர் சாலையில் அமைந்துள்ள பல்லோட்டி மேல்நிலைப் பள்ளியில் (பில்லர் வளாகம்), விரதத்திற்காக மாலை அணிந்து வந்த மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகம் வெளியே அமர வைத்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவர் S. தர்ஷன் மற்றும் 6-ம் வகுப்பு பயிலும் மாணவர் S. நிவின் சாய் ஆகியோர், சமய வழிபாட்டிற்காக மாலை அணிந்து பள்ளிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் முறையான பள்ளிச் சீருடையில், விபூதி, குங்குமம் ஏதும் இன்றி, காலணி (செருப்பு) அணிந்தே பள்ளிக்குச் சென்றுள்ளனர். இருப்பினும், மாலை அணிந்து வந்த காரணத்திற்காகப் பள்ளி நிர்வாகத்தினர் அந்த மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுத்து, கடந்த இரண்டு நாட்களாக வகுப்பறைக்கு வெளியே அமர வைத்ததாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கல்வி கற்கச் சென்ற மாணவர்களை மாலை அணிந்ததற்காக வெளியே அமர வைத்த பள்ளி நிர்வாகத்தின் இச்செயல், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்துக் கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.