• Tue. Nov 24th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கார்த்திகை திருநாளில் துர்நாற்றத்திற்கு மத்தியில் தவிக்கும் பொதுமக்கள்!

BySeenu

Nov 24, 2026

​ தமிழ்நாடு முழுவதும் இன்று கார்த்திகை தீபத் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை சிவானந்த காலனி, ரத்தினபுரி பகுதியில் தூர்வாரப்பட்ட சாக்கடைக் கழிவுகள் வீட்டு வாசல்களின் முன்பே குவித்து வைக்கப்பட்டு உள்ளதால், கோலமிட்டு தீபம் ஏற்ற முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் வேதனையும் அதிருப்தியும் அடைந்து உள்ளனர்.

கோவை, சிவானந்த காலனி, ரத்தினபுரி கருமாரியம்மன் கோவில் அருகே வ.உ.சி வீதி செல்லும் பாதையில், கடந்த பருவ மழைக் காலத்தில் பெய்த கன மழையின் போது சாக்கடைக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது.

​இதனை அடுத்து, சில நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடைக் கால்வாயைத் தூர்வாரினர். ஆனால், சாக்கடையில் இருந்து அள்ளப்பட்ட கழிவுகளைக் காய்ந்த பிறகு உடனடியாக அப்புறப்படுத்தாமல், ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பும் அப்படியே குவித்து விட்டுச் சென்று உள்ளனர்.

கழிவுகள் அகற்றப்படாமல் பல நாட்களாக வீட்டு வாசல்களிலேயே கிடப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது.

​இன்று கார்த்திகை தீபத் திருநாள் என்பதால், வீட்டு வாசல்களைச் சுத்தம் செய்து கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டிய சூழலில், வாசல் முழுவதும் சாக்கடைக் கழிவுகள் குவிந்து கிடப்பது குடியிருப்புவாசிகளை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

​”தமிழ்நாடு முழுவதும் இன்று கார்த்திகை தீபம் கொண்டாடும் நிலையில் எங்க தெருவுக்கு மட்டும் இப்படியா ? வாசலில் சாக்கடைக் கழிவுகளை வைத்துக் கொண்டு எப்படி கோலமிட்டு தீபம் ஏற்றுவது ?” என வ.உ.சி வீதி பொதுமக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கடந்த வாரமே தூர்வாரப்பட்ட கழிவுகளை இதுவரை அப்புறப்படுத்தாத மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் பண்டிகை நாளில் தவிப்பதாகக் குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள், கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு வ.உ.சி வீதியில் குவிந்து கிடக்கும் சாக்கடைக் கழிவுகளை அப்புறப்படுத்தித் தெருவைச் சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.