திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அதனை நிறைவேற்றக் கோரி இந்து அமைப்பினர் பூஜை பொருட்களுடன் கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில், கோவில் நிர்வாகம் தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குத் தேவையான 5 லிட்டர் எண்ணெய் கொள்ளளவு கொண்ட மண் சட்டி, 16 கிலோ நெய், கற்பூரம், தீப்பெட்டி, தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை மேள தாளங்களுடன் எடுத்து வந்து கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர்.
இந்த நிகழ்வில் சிவசேனா, அகில பாரத அனுமன் சேனா, இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சோலை கண்ணன், வேல்முருகன், ராமலிங்கம், வெற்றிவேல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உரிய நடவடிக்கை எடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



