• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கும் வேளையில் உயிர்களோடு விளையாடும் நிர்வாகம் – பொதுமக்கள் கொந்தளிப்பு!

ByKalamegam Viswanathan

Nov 23, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்பட்டு வரும் 108 அவசரகால ஊர்தி, ஓட்டுநர் மற்றும் அவசரகால மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர் (EMT) ஆகிய பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தும் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக இயக்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. இதனால், இப்பகுதியில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களும், சாலை விபத்துகளில் சிக்குபவர்களும் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
​

தற்போது திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏதேனும் விபத்தோ அல்லது அவசர மருத்துவத் தேவையோ ஏற்பட்டால், தோப்பூர், அவனியாபுரம் அல்லது பெரியார் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்துதான் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் பெரும் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், அவர்கள் அலட்சியமாகப் பதில் அளிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
​

இதற்குச் சான்றாக, இன்று காலை திருப்பரங்குன்றம் தெப்பக்குளம் பகுதியில் ஒருவர் விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தார். திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் இயக்கப்படாததால், தோப்பூரில் இருந்து வாகனம் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்கான முக்கிய நேரமான ‘கோல்டன் ஹவர்ஸ்’ (Golden Hours) எனப்படும் பொன்னான நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். ஆனால், தோப்பூரில் இருந்து ஆம்புலன்ஸ் வந்து சேரவே 28 முதல் 35 நிமிடங்களுக்கு மேல் ஆனதால், காயமடைந்தவருக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.
​

குறிப்பாக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிய உள்ள நிலையில், அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் இயக்கப்படாமல் இருப்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
​எனவே, பக்தர்களின் பாதுகாப்பையும் பொதுமக்களின் உயிரையும் கருத்தில் கொண்டு, திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் சேவையை உடனடியாகத் தொடங்க 108 அவசரகால ஊர்தி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.