• Tue. Nov 24th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

தெருநாய்கள் கடித்துக் குதறிய மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை..,

ByKalamegam Viswanathan

Nov 23, 2026

காரைக்குடியில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த மூதாட்டிக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
​சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் நம்புதாய் (83). இவர் கடந்த நவ.29ம் தேதி காரைக்குடியில் நடந்து சென்றபோது, தெருநாய்களைக் கண்டு நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது, கூட்டமாக வந்த நாய்கள் அவரது இடது கட்டைவிரலைக் கடித்துத் துப்பியதுடன், முகத்தில் இரு இடங்களிலும் கடித்துப் படுகாயப்படுத்தியுள்ளன. மேலும், உடல் முழுவதும் பல்வேறு இடங்களிலும் நாய்கள் கடித்துள்ளன. இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த மூதாட்டியை, அப்பகுதியில் இருந்தவர்கள் நாய்களை விரட்டியடித்து மீட்டனர்.
​

சிவகங்கை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவரது முகத்தில் ஏற்பட்ட காயங்கள் மிகக் கடுமையாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மருத்துவர்கள் குழுவினர் நம்புதாய்க்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
​

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: “தெருநாய்கள் கடித்துள்ள நம்புதாய், வயது முதிர்வு மற்றும் சம்பவ அதிர்ச்சியால் மிகவும் சோர்வடைந்துள்ளார். அவரைக் கவனித்துக்கொள்ள அரசு மருத்துவமனை சார்பில் தனி உதவியாளர் நியமிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். சிவகங்கையிலேயே அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூதாட்டி நம்புதாயிடம் ரேபிஸ் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததால், அவர் தனிமை வார்டுக்கு மாற்றப்படவில்லை” என்றனர்.
​

காரைக்குடி பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், எனவே உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாகத் தெருநாய்களைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் இனி எந்த ஒரு பகுதியிலும் நடக்காமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.