கடலூர் மாவட்டம் கீழக்கல்பூண்டி அரசு மேல்நிலை பள்ளியில் மனிதகுலத்தின் வரலாற்றுச் சாதனை வாயேஜர் 1 விண்கலத்தின் விண்வெளிப் பயணம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் திருமதி அ. அன்பரசி தலைமை வகித்தார்.

அறிவியல் ஆசிரியர் திரு கா. ரகுநாதன் அனைவரையும் வரவேற்றார். உயிரியல் ஆசியர் பா. உமா ராணி மற்றும் கணினி அறிவியல் ஆசிரியர் அஹத் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர், தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் சங்கம் செயலாளர் முனைவர் பொ.ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார்.
1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று அமெரிக்காவின் கேப் கனாவரலில் இருந்து ஏவப்பட்ட வாயேஜர் 1 விண்கலம், மனிதகுலத்தின் மிகச் சிறந்த விண்வெளி ஆராய்ச்சிச் சாதனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

வியாழன் மற்றும் சனி ஆகிய பெருங்கோள்களை நெருங்கி ஆய்வு செய்த பின்னர், சூரிய மண்டலத்தின் எல்லையைக் கடந்து விண்மீன்களுக்கிடையேயான விண்வெளியில் தொடர்ந்து பயணித்து வருகிறது. இச்சிறப்புரையில் வாயேஜர் 1 விண்கலத்தின் வரலாற்றுப் பயணம், அதன் அறிவியல் கண்டுபிடிப்புகள், வியாழன் கோளின் அயோ துணைக்கோளில் கண்டறியப்பட்ட எரிமலைச் செயல்பாடுகள், சனிக்கோளின் வளைய அமைப்புகள், டைட்டன் துணைக்கோளின் வளிமண்டலம் போன்ற முக்கியமான அறிவியல் தகவல்கள் விளக்கப்பட்டது.
மேலும், 2026 நவம்பர் 18 அன்று பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை வாயேஜர் 1 எட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்தும் விளக்கப்பட்டது. ஒரு ஒளி நாள் என்பது ஒளி 24 மணி நேரத்தில் பயணிக்கும் தொலைவாகும். இது சுமார் 2,590 கோடி கிலோமீட்டர் ஆகும்.

1990 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகழ்பெற்ற Pale Blue Dot எனப்படும் வெளிர் நீலப் புள்ளி புகைப்படம், பூமியின் முக்கியத்துவத்தையும் பிரபஞ்சத்தில் மனிதகுலத்தின் இருப்பையும் எடுத்துரைக்கும் வகையில் விளக்கப்பட்டது.
அதேபோல், வாயேஜர் விண்கலத்தில் அனுப்பப்பட்ட கோல்டன் ரெக்கார்டு (Golden Record), அதில் இடம்பெற்றுள்ள 55 மொழிகளின் வாழ்த்துகள், புளூட்டோனியம்-238 மூலம் மின்சாரம் தயாரிக்கும் RTG தொழில்நுட்பம், விண்கலத்தின் அறிவியல் கருவிகள், பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு தாமதம் மற்றும் விண்மீன்களுக்கிடையேயான விண்வெளியின் தன்மைகள் ஆகியவை குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர். மேலும் வான் நோக்கல் நிகழ்வில் சூரிய வடிகட்டி மூலம் சூரிய கரும்புள்ளி மற்றும் தொலைதூர பொருள் ஆகியவை தொலைநோக்கியின் மூலமாக காண்பிக்கப்பட்டது. 300 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களிடையே வானியல், வானியற்பியல், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.