• Thu. Nov 19th, 2026

தேக்கம்பட்டி சிறையில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுகிறார்களா?

ByAjmalkhan saleemraja

Nov 19, 2026

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறைச்சாலையில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதாக, சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சுளா நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி இரவு 4 காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு, ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தது. இக்குழுவினர் நேற்று தேக்கம்பட்டி சிறைச்சாலைக்கு நேரில் சென்று, கைதிகள் தப்பிச் சென்றபோது பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவரான மீனாட்சி சுந்தரம், காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், சிறையில் கைதிகள் துன்புறுத்தப்படுவதாகவும், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும், உறவினர்கள் தங்களைச் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறையில் கைதிகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறதா? தேவையான அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சுளா இன்று தேக்கம்பட்டி சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.

சிறையிலிருந்து தப்பிச் சென்று மீண்டும் பிடிபட்ட 17 கைதிகளும் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகளிடம் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்த விசாரணையின் முடிவில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதன் பின்னரே, தப்பிச் சென்ற கைதி வெளியிட்ட வீடியோவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது தெரியவரும்.