லோக் ஜன சக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளுக்கு நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

தமிழக மாநிலத் தலைவர் காசி மாறன் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் தேவப்பிரியன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் காசி மாறன் கூறியதாவது:
கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக மக்களின் வாழ்வாதாரம், சமூக நீதி, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நலன் சார்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையைப் போக்க காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்கத் தனி ஆணையம் அமைத்து, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், லோக் ஜன சக்தி கட்சியைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் மீது மேற்கொண்ட தகாத செயலுக்கு முதலமைச்சர் உரிய கண்டனத்தையும் நடவடிக்கையையும் தெரிவிக்காதது கண்டனத்திற்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.