• Sat. Nov 14th, 2026

அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி பரிசு வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்..,

ByAjmalkhan saleemraja

Nov 14, 2026

தேனி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

தேனி அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

17 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என நான்கு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.

அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் இருந்து கொடுவிலார்பட்டி வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்தப் போட்டியில், 200-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு, போட்டியில் பிரிவு வாரியாக வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.