கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், அணைபிள்ளையார் நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தீபாவளி விடுமுறையில் இப்பகுதிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை குரங்கணி வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைபிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி, கொட்டகுடி மற்றும் வடக்கு மலைப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நேற்று இரவு கொட்டகுடி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை மழைப்பொழிவு இல்லாததால் வெள்ளப்பெருக்கு படிப்படியாகக் குறைந்துள்ள நிலையில், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போடி அருகே கொட்டகுடி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அணைபிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் இப்பகுதிக்கு வருகை தந்து வருகின்றனர். இதையடுத்து குரங்கணி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுமுறை நாளில் குடும்பத்தினருடன் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழலாம் என்ற எதிர்பார்ப்புடன் வந்த சுற்றுலாப் பயணிகள், குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
