தேனி மாவட்டம் போடியில் நூற்றாண்டுகளைக் கடந்து கல்விச் சேவையாற்றி வரும் ஜமீன்தாரணி காமூலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, 3,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் போடி ஜமீன்தாரணி காமூலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியன் மாணவர்களுக்கு கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முன்னதாக, மாணவர்கள் தங்களது எதிர்கால இலக்குகளை வெளிப்படுத்தும் வகையில் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் வேடங்களை அணிந்து வந்து, தங்களது லட்சியம் மற்றும் அந்தத் துறையின் முக்கியத்துவம் குறித்து சக மாணவர்களிடையே உரையாற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியன் பேசுகையில், மாணவர்கள் தாங்கள் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அந்த இலக்கை அடைவதற்காக இன்றிலிருந்தே கடினமாக உழைத்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைவரும் தங்களது இலக்குகளை அடைந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.