புத்தாடைகள் இல்லாமல் தீபாவளியை கொண்டாட முடியாமல் தவித்த மலைவாழ் மக்கள், 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேனி உலக அமைதி குழுவினர் புத்தாடைகள் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு புத்தாடைகள் வழங்கி தீபாவளி கொண்டாடிய உலக அமைதி குழுவினர்!
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு புத்தாடைகள் வழங்கி, அவர்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடிய தேனி உலக அமைதி குழுவினரின் நெகிழ்ச்சியான நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
போடி அருகே மேலப்பருவு மலைக்கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் விவசாயக் கூலி வேலைகளில் ஈடுபட்டு வரும் இக்கிராம மக்கள், போதிய பொருளாதார வசதியின்றி தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க முடியாத சூழலில் இருந்துள்ளனர்.

இதனை அறிந்த தேனி உலக அமைதி குழுவினர், மலைக்கிராமத்திற்கு நேரில் சென்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கி தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
மேலும், மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு பெரியவர்களுக்கு போர்வைகளும் வழங்கப்பட்டன.
புத்தாடைகளைப் பெற்றுக்கொண்ட குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து, ‘ஹேப்பி தீபாவளி’ எனக் கூறி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுக்கும் தீபாவளி கொண்டாட்டம் கிடைத்த மகிழ்ச்சியில் மலைக்கிராம மக்களும் நெகிழ்ச்சியடைந்தனர்.

பண்டிகை என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தமானது என்பதை உணர்த்தும் வகையில், தீபாவளியை கொண்டாட முடியாமல் தவித்த மலைவாழ் மக்களுக்கும் புத்தாடைகள் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்திய தேனி உலக அமைதி குழுவினரின் மனிதநேயச் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசுகளும், புத்தாடைகளும் மட்டுமல்ல… அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்வதே உண்மையான தீபாவளி என்பதை உணர்த்தியுள்ளது இந்த மனிதநேய நிகழ்வு!