• Fri. Nov 13th, 2026

மதுரை பசுமலையில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து..!

ByKalamegam Viswanathan

Nov 13, 2026

மதுரை திருப்பரங்குன்றம் சாலை, பசுமலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பர்னிச்சர் கடை செயல்பட்டு வருகிறது. இன்று மாலை சுமார் 5 மணியளவில், இந்தக் கடையில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த மரச்சாமான்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் தீ மளமளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இது குறித்துத் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து மதுரை டவுன் மற்றும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு அவற்றின் மூலமாகவும் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சுமார் 2 மணி நேரம் தீவிரமாகப் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

முன்னதாக, இந்தத் தீ விபத்து காரணமாக மதுரை – திருப்பரங்குன்றம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

மேலும், இந்தத் தீ விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.