யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 108-வது நிறுவன தின விழா கோவையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மண்டலத்தில் 5 புதிய வங்கிக் கிளைகள் மற்றும் 3 யுவா லவுஞ்ச் மையங்கள் தொடங்கப்பட்டன.

கடந்த 1919-ம் ஆண்டு தொடங்கப்பட்ட யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, தனது 108-வது நிறுவன தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கில் நிறுவன தின விழா நடைபெற்றது.

விழாவில் வங்கியின் பொது மேலாளரும், கோவை மண்டலத் தலைவருமான எஸ்.ஏ. ராஜ்குமார், கோவை மண்டல உறுதிப்பாட்டுப் பிரிவுத் தலைவர் சி. பிரபு, துணை பொது மேலாளரும் கோவை பிராந்தியத் தலைவர் எஸ்.எஸ். லாவண்யா ஆகியோர் பங்கேற்றனர். வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிறுவன தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 108 புதிய வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மண்டலத்தில் கோவைப்புதூர், கோத்தகிரி, வள்ளியூர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி வளாக யுவா கிளை ஆகிய 5 புதிய வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.
