• Tue. Nov 10th, 2026

சிறப்பு சார்பு ஆய்வாளர் அடித்துக் கொலை

ByAjmalkhan saleemraja

Nov 9, 2026

தேனியில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த போதை கும்பலைத் தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் அடித்துக் கொலை செய்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனியில் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த போதை கும்பலைத் தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்தவர் 56 வயதான சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார். இவர் அல்லிநகரம் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, தேனி சமதர்மபுரம் அருகே மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் சாலையை மறித்து பட்டாசு வெடித்துக் கொண்டும், ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை மறித்து பட்டாசு வெடிக்கக் கூடாது என இளைஞர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இளைஞர்களின் செயல்பாடுகளை தனது கைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த போதை கும்பல், சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமாரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை..,

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற சமதர்மபுரம் பகுதிக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்ததைத் தட்டிக்கேட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.