• Tue. Nov 10th, 2026

கால்நடை மருத்துவமனை அமைக்க விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Nov 10, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி மற்றும் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இரும்பாடி சின்ன இரும்பாடி கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் சாலாச்சிபுரம் கணேசபுரம் பொம்மன் பட்டி அம்மச்சியாபுரம் மேல் நாச்சிகுளம் ஆகிய கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் 100 முதல் 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்நடைகளுக்கு ஏற்படும் உடல் நலக் கோளாறு மற்றும் விபத்துகள் உள்ளிட்ட சிகிச்சைக்காக இந்த பகுதியில் கால்நடை மருத்துவமனை இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு கால்நடைகளை பயன்படுத்தி வருபவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரமுள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கால்நடைகளை நடந்தே அழைத்து செல்வதாகவும் அங்கேயும் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே மருத்துவர் வருவதால் அங்கிருந்து வாகனங்களில் கால்நடைகளை ஏற்றி வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் குறிப்பாக பொருளாதார பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். கால்நடை மருத்துவமனை தரப்பில் கேட்டபோது ஆயிரம் கால்நடைகள் இருந்தால் மட்டுமே கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் கூறப்படுவதாக கூறுகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் விவசாய மற்றும் கால்நடைகள் மூலம் வரும் வருமானத்தை நம்பியே உள்ளனர். ஆகையால் இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த கிராமங்களில் மையப் பகுதியாக உள்ள கருப்பட்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் கால்நடைகளுக்கு அடிக்கடி உடல் நல பிரச்சனைகள் அதிக அளவு ஏற்படும் நிலையில் கருப்பட்டி அடுத்து தனியார் பள்ளி எதிரில் உள்ள காலி இடத்தில் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை மொத்தமாக வரவழைத்து தற்காலிகமாக நடமாடும் வாகனம் மூலம் மருத்துவ சிகிச்சைகள் செய்யப்படுவதாகவும் அதே இடத்தில் சொந்தமாகண அரசு இடத்தை கையகப்படுத்தி கால்நடை மருத்துவமனை அமைத்தால் பெரும் உதவியாக இருக்கும் எனவும் இந்த பகுதி கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.