• Wed. Nov 4th, 2026

தேனியில் 9,438 பயனாளிகளுக்கு ரூ.72.88 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்..,

ByAjmalkhan saleemraja

Nov 4, 2026

தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 9,438 பயனாளிகளுக்கு ரூ.72.88 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும், ரூ.4.97 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த 9 திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, ரூ.11.83 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மொத்தம் ரூ.16.80 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில்,

கடந்த காலங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது மகளிர் நேரடியாகப் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.