புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அடுத்த அரசம்பட்டியில் உள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட சைபர் கிரைம் (சைபர் குற்றப்பிரிவு) சார்பில் இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 30) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெண்ணிலா வரவேற்றார். மாவட்ட சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, தலைமைக் காவலர் சாமியப்பன் சைபர் குற்றங்கள் குறித்தும், இன்றைய டிஜிட்டல் உலகில் அவற்றின் தாக்கம் குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமை வகித்துச் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

“இன்று நாளுக்கு நாள் புதிதுபுதிதாக இணையதளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு மோசடிக்காரர்களின் பிரதான ஆடுகளமாக இன்டர்நெட் உலகம் மாறிவிட்டது. எந்த ஒரு செயலியையும் நமது அலைபேசியில் பதிவிறக்கம் செய்யும் போது, நம்மைப் பற்றிய சுய விவரங்கள், கேமரா, மைக்ரோஃபோன், புகைப்படங்கள் போன்றவற்றை அனுமதியின்றி அணுக வழிவகை செய்யக்கூடாது. முகம் தெரியாத நபர்களின் பின்னணி அறியாமல் அவர்களுடன் நெருக்கமாக உரையாடுவதோ, நமது தனிப்பட்ட சுய விவரங்களை பகிர்ந்துகொள்வதோ ஆபத்தில் முடியும்.

நமது ஆதார் கார்டைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு சிம் கார்டுகள் வாங்கித் தருவதோ, அல்லது நமது பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கி அதை வேறு நபர்களிடம் ஒப்படைப்பதோ சட்டப்படி குற்றமாகும். மற்றவர்கள் தரும் சொற்பத் தொகைக்காக அவர்களுக்காக நாம் பணப் பரிவர்த்தனை செய்வது மிகப்பெரிய சிக்கலில் கொண்டுபோய் விடும். மேலும், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே ‘டிஜிட்டல் அரஸ்ட்’ போன்ற கைது நடவடிக்கைகளை ஆன்லைனில் செய்வதில்லை; அது முழுக்க முழுக்க சைபர் மோசடிக்காரர்களின் ஏமாற்று வேலையாகும்.
நம்முடைய சில புகைப்படங்களும், நம்மைப் பற்றிய ரகசியத் தகவல்களும் நம்மை அறியாமலேயே இணையம் மூலம் திருடப்படுகின்றன. எனவே, மாணவர்கள் அனைவரும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் உங்களுக்கு யாரால் எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டாலும், உடனடியாக சைபர் குற்றக் காவல்துறையினரைத் தொடர்புகொள்ளலாம். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் உதவவும் நாங்கள் எப்போதுமே தயாராக இருக்கிறோம்.”
இவ்வாறு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் சரவணக்குமார் நன்றி கூறினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவியர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.