• Fri. Oct 30th, 2026

பல்லாவரத்தில் ஸ்ரீ மஹா வல்லப சக்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்..,

ByPrabhu Sekar

Oct 30, 2026

சென்னையை அடுத்த பல்லாவரம் பாரதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா வல்லப சக்தி விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த யாக பூஜையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, பூர்ணாஹுதி அளித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளம் மற்றும் சிவ மேளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, ஆலய கோபுர கலசத்திற்கும், மூலவர் ஸ்ரீ மஹா வல்லப சக்தி கணபதிக்கும், யோகேஸ்வரி அம்பிகா சமேத யோகேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆலய கமிட்டி உறுப்பினர் சத்யா, தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன், அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் ஆலய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.