கோவை, ஓணம்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 10 அடி நீளக் காயம் அடைந்த மலைப் பாம்பைப் (Indian Rock Python) பாம்பு பிடி வீரர் ஒருவர் மீட்ட சம்பவமும், வனத்துறையின் தொடர்பு எண்கள் இயங்காததால் எழுந்த சர்ச்சையும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஓணம்பாளையம் ‘வெஸ்டர்ன் வேலி கிரீன் ஹோம்ஸ்’ (Western Valley Green Homes) குடியிருப்புப் பகுதிக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள பிரம்மாண்ட மலைப் பாம்பு ஒன்று புகுந்து உள்ளது.
மழைக்காலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த மலைப் பாம்பு, குடியிருப்புக்குள் நுழையும் போது உடலின் சில இடங்களில் காயம் அடைந்து காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க முயன்றனர்.
பாம்பை மீட்பதற்காக இணையதளத்தில் (Online) கொடுக்கப்பட்டு உள்ள கோவை வனத்துறை அதிகாரிகளின் அவசரத் தொடர்பு எண்களைத் தொடர்புகொள்ளப் பொதுமக்கள் பலமுறை முயன்றனர். ஆனால், அனைத்து எண்களும் தொடர்புகொள்ள முடியாத நிலையிலேயே (Not Reachable) இருந்து உள்ளன. வனத்துறையின் இந்த அலட்சியப் போக்கு மற்றும் புதுப்பிக்கப்படாத அவசர எண்கள் குறித்து அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
வனத்துறையினரைத் தொடர்புகொள்ள முடியாத சூழலில், திருச்சி தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமிக்கப் பாம்பு பிடி வீரரான பிரகாஷ் (தற்போது கோவையில் Cane Corso நாய் வளர்ப்பு மையம் நடத்தி வருபவர்) அங்கு வரவழைக்கப்பட்டார். திருச்சியில் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட அனுபவம் கொண்ட அவர், காயம் அடைந்த அந்த 10 அடி மலைப் பாம்பைப் மிகச் சாதுரியமாக மீட்டார்.
அதிகாரிகளைத் தொடர்புகொள்ளப் பலமுறை முயன்றும் முடியாததால், பாம்பிற்கு மேலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதனைப் பத்திரமாக மீண்டும் அதே பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
கோவையில் அவசரக் காலத்தில் வனத்துறையின் எண்கள் கிடைக்காதது பெரும் கவலை அளிப்பதாகத் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், இணையதளங்களில் உள்ள அவசர எண்களை வனத்துறை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், கோவை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் வீடுகள் அல்லது குடியிருப்புகளுக்குள் பாம்புகள் புகுந்தால், பொதுமக்கள் தங்களை அச்சமின்றித் தொடர்பு கொள்ளலாம் எனத் தன்னார்வப் பாம்பு மீட்பு வீரர்கள் தெரிவித்து உள்ளனர்.