• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதாக நான் கூறியதற்கு இதுவே சான்று -எடப்பாடி பழனிசாமி..,

ByKalamegam Viswanathan

Oct 29, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்யச் சென்றபோது, மின்தடை ஏற்பட்டதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி, வியாழக்கிழமை (அக். 29) மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அவர் கோவிலுக்குள் சென்ற சில நிமிடங்களில் மின்தடை ஏற்பட்டது.

இதனால் கோவிலுக்குள் இருந்த பக்தர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாகினர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை நீடித்ததாகக் கூறப்படும் நிலையில், கோவிலில் உள்ள ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்திற்குப் பிறகு விளக்குகள் எரியத் தொடங்கின.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் செல்லத்துரையிடம் கேட்டபோது, கோவிலில் மின்தடை ஏற்பட்டதை உறுதிப்படுத்தினார். எடப்பாடி பழனிசாமிக்காக ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை என்றும், பக்தர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கோவிலில் உள்ள ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, மின்தடை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதாக நான் கூறியதற்கு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தடையே சான்று. மதுரை மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் இந்த மின்தடை சம்பந்தமாகப் பார்த்துக் கொள்வார்கள். மக்கள் நிம்மதியாக வாழவும் முடியவில்லை; இறைவனை நிம்மதியாகச் சாமி தரிசனம் செய்யவும் முடியவில்லை” என்று வேதனை தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசிய பின்னரும் சில நிமிடங்களில் மீண்டும் மின்தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகினர்.