• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

கோவையில் 2 தனியார் பேருந்து டிரைவர், கண்டக்டர்கள் நடுரோட்டில் பயங்கர மோதல்..,

BySeenu

Oct 29, 2026

​ கோவையில் நேரம் மற்றும் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டியால், இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வீதியின் நடுவே பேருந்துகளை நிறுத்தி விட்டு மாறி மாறித் தாக்கிக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

கோவை, பீளமேடு பகுதியில், வழித்தடம் மாறி இயக்கப்பட்டதாகக் கூறப்படும் 2-ஆம் எண் கொண்ட ‘சிவசக்தி’ தனியார் பேருந்து (பேரூர் – பாலிடெக்னிக்) மற்றும் ‘S7’ எண் கொண்ட தனியார் பேருந்து (ஒண்டிப்புதூர் – கோவைப்புதூர்) ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வந்தன. அப்போது, இரு பேருந்துகளின் ஊழியர்களுக்கும் இடையே, இடையே நேரக் கட்டுப்பாடு (Timing Competition) மற்றும் பயணிகளை ஏற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், போக்குவரத்து நிறைந்த பீளமேடு சாலையின் நடுவே பேருந்துகளை அப்படியே நிறுத்தி விட்டு, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

கடைசி நேரத்தில் லாப நோக்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு, உரிய நேரத்தில் பேருந்தை எடுக்காமல் பயணிகளைப் பிடிப்பதிலேயே குறியாக இருக்கும் இந்தத் தனியார் பேருந்து ஊழியர்கள், அடிக்கடி இதுபோன்ற மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மீறி (Route Deviation) பேருந்துகளை இயக்குவதும் இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

பேருந்தில் பயணிகள் அமர்ந்து இருந்ததையும், சாலையில் வாகன நெரிசல் ஏற்படுவதையும் சற்றும் பொருட்படுத்தாமல், தனியார் பேருந்து ஊழியர்கள் பொதுவெளியில் வீதியில் நின்று கொண்டு குத்துச்சண்டையில் ஈடுபட்டதை அப்பகுதியில் சென்ற நபர் ஒருவர் தனது கைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.
​

அந்தச் செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து இடையூறு செய்யும் வகையிலும் செயல்பட்ட அந்த இரு தனியார் பேருந்து ஊழியர்கள் மீது கோவை மாநகரப் போக்குவரத்து காவல் துறையினர் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.