கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களைச் சுத்தம் செய்து, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோவையில் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களில் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் தொழில் உபகரணங்களைச் சுத்தம் செய்து, அவற்றுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் பல்வேறு பகுதியில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிறுவனங்களில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சுத்தம் செய்யப்பட்டு, வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டன. மேலும், இயந்திரங்களுக்கு மலர் மாலைகள் அணிவித்து, பொரி, கடலை, பொங்கல் மற்றும் பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த ஆண்டு தொழில் வளம் பெருகவும், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கவும், தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் வாழவும் வேண்டி தொழில் நிறுவனத்தினர் வழிபாடு மேற்கொண்டனர்.



