மதுரை மாவட்டம் சோழவந்தானில் வேப்பமர ஸ்டாப் முதல் விவேகானந்தர கல்லூரி வரை சாலையில் ஆங்காங்கே 50க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றி திரிகிறது மேலும் நடு ரோட்டில் 10 கற்கும் மேற்பட்ட மாடுகள் நின்று கொண்டும் படுத்துக்கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

சாலையில் உள்ள மாடுகளால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக சோழவந்தான் தீயணைப்பு நிலையம் முதல் ஆர் எம் எஸ் காலனி வரை சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இன்று காலை சோழவந்தான் காவல் நிலையம் அடுத்து ஆர் எம் எஸ் காலனி செல்லும் வழியில் 20க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையின் நடுவே நின்று கொண்டிருந்தது.

இதனால் சோழவந்தானிலிருந்து மதுரை செக்கானூரணி போன்ற நகரங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் செல்வதில் கடும் இடையூறு ஏற்பட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் மாட்டின் மீது முட்டி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றனர். பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடமும் சோழவந்தான் காவல்துறையிடமும் இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மாடுகளை வளர்ப்போர் தங்களது வீட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டு விடுவதாக கூறுகின்றனர். அவ்வாறு அவிழ்த்து விடப்படும் மாடுகள் மூன்று கிலோ மீட்டர் தூரம் சாலையில் அங்கும் இங்கும் குறுக்கு நெருக்கமாக செல்கிறது. சில மாடுகள் சாலை நடுவே படுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
மாட்டின் உரிமையாளர்களோ இதுகுறித்து எந்த கவலையும் படுவதில்லை பேரூராட்சி நிர்வாகம் பணியாளர்கள் மூலம் வாகனங்களை ஏற்பாடு செய்து மாடுகளை ஏற்றி பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒரு நாள் வைத்திருந்தால் போதும் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை ரோட்டில் விட மாட்டார்கள் அல்லது காவல்துறையினர் மாடுகளை வெளி ஆட்கள் மூலம் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்று வைத்திருந்தால் மாட்டின் உரிமையாளருக்கு இது போன்ற செயலில் ஈடுபட தோன்றாது.

ஆனால் அதிகாரிகள் பொதுமக்களின் நலன் குறித்து கவலைப்படாமல் இருப்பதால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் மாடுகள் சாலையில் சர்வ சாதாரணமாக சென்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து சோழவந்தானில் சாலைகளில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாட்டின் உரிமையாளர்களுக்கு மாடுகளை ரோட்டில் விடாதவாறு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் மேலும் ரோட்டில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு குறைந்த அளவு அபராதம் விதித்தாலே இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என பொதுமக்கள் கூறுகின்றனர்.



