• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வெற்றிப் பயணத் திட்ட 3 அரசு பேருந்துகள் ஜப்தி..,

ByKalamegam Viswanathan

Oct 6, 2026

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த வெற்றிப் பயணத் திட்டத்தைச் சேர்ந்த 3 அரசு பேருந்துகள் நீதிமன்ற உத்தரவால் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் அண்ணா நகர் பகுதியில் அரசு பேருந்து மோதி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஜாபர் சாதிக், யாஸ்மின், சுப்பிரமணி ஆகிய மூன்று மனுதாரர்கள் அரசு பேருந்து விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு உரிய இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மனுதாரர்கள் மூவருக்கும் தலா இழப்பீடு சேர்த்து மொத்தம் 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் நீதிமன்றத்தில் ஜப்தி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் 20 லட்சம் ரூபாய்க்கு 3 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவு நகலுடன் இன்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், அங்கு வந்து நின்ற 3 வெற்றிப் பயணத் திட்ட அரசு பேருந்துகளில் நோட்டீஸ் ஒட்டி பேருந்துகளை ஜப்தி செய்தனர்.

இதனால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வெற்றிப் பயணத் திட்ட பேருந்துகளில் வந்த பயணிகள் அனைவரும் பாதியிலேயே இறக்கி விடப்பட்டனர். இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சியும் சிரமமும் அடைந்தனர். குறிப்பாக பெண்கள் இலவச பயணத்திற்காக காத்திருந்த நிலையில் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.