மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட நிலையூர் ராமானுஜர் நகர், ஓம் சக்தி நகர் போன்ற பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் மற்றும் வீடுகளில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த மாதம்15 ஆம் தேதி நள்ளிரவில் நிலையூர் மெயின் சாலையில் உள்ள சுப்புலட்சுமி மல்லிகை கடையின் கதவை உடைத்து கடைக்குள் இருந்த ஒரு லட்சத்து 34 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கடை உரிமையாளர் இதுகுறித்து ஆஸ்டின்பட்டி நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து அதே மாதம் 23ஆம் தேதி முத்து ஆயில் ஸ்டோர் மற்றும் முருகன் முட்டை கடையில் நள்ளிரவில் கடப்பாறையால் கடையின் பூட்டை உடைத்து கல்லாபட்டியில் இருந்த 2500 ரூபாய் பணத்தை திருடிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் தான் திருடப்பட்ட கடைகளுக்கு அருகே உள்ள டூவீலர் ஒர்க் ஷாப் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் சிறார்கள் சிலர் கடைக்கு அருகே வந்து நோட்டம்மிடுவதும் இரும்பு கம்பி போன்ற ஆயுதங்கள் கொண்டு சென்று திருடி செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதனைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, மேலும் தங்களை அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அடுத்த நாள் 24 ஆம் தேதி மதிய வேலையில் அந்த பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் கடையை அடைத்து விட்டு தனது வீட்டிற்கு சென்று தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரது வீட்டிற்குள் புகுந்து 5000 ரூபாய் பணமும் செல்போனையும் திருடி சென்றுவிட்டதாகவும் அருகே உள்ளே கோவில் உண்டியலையும் உடைத்து விட்டதாகவும் மேலும் பகல் நேரத்தில் இதுபோன்று அடிக்கடி திருட்டு சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அருகில் இயங்கி வரும் அரசு மதுபான கடையால் மது போதையில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வதும் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் கடைகள் நடத்தி வரும் உரிமையாளர்களை மிரட்டுவதும் போன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் தங்கள் பகுதிக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.




