• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் கடை அருகே போலீஸாரின் கண்ணில் மண்ணைத் தூவி வியாபாரம்..,

BySeenu

Oct 6, 2026

கோவை, சௌரிபாளையம் பகுதியில் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாகவே, காலை 6 மணி முதல் தள்ளுவண்டிக் கடையில் வைத்து கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் அதிர்ச்சி செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சௌரிபாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. அரசு விதிகளின்படி நண்பகல் 12 மணிக்கு மேல் தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும்.
​ஆனால், இந்த டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே அமைக்கப்பட்டு இருக்கும் தள்ளுவண்டிக் கடை ஒன்றில், தினமும் அதிகாலை 6 மணி முதலே சட்டவிரோதமாகக் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்பட்டு வந்து உள்ளன.
​
அதி காலையிலேயே மதுப் பிரியர்கள் அந்தத் தள்ளுவண்டிக் கடையைச் சூழ்ந்து கொண்டு நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்லும் காட்சிகளை, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களது செல்போன்களில் ரகசியமாகப் படம் பிடித்தனர்.

​அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது.
​
அரசு விதிமுறைக் நேரத்திற்கு முன்பாகவே, அதுவும் குடியிருப்பு மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சௌரிபாளையம் பகுதியில் இவ்வாறாகக் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுவது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கும், அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கவும் வழிவகுக்கும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

​எனவே, உள்ளூர் போலீஸாரும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரும் உடனடியாகத் தலையிட்டுச் சௌரிபாளையத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் அவர்களுக்குப் பின்னணியில் இருக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.