கோவை ராயல் கேர் மருத்துவமனையில் புதிய நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், நரம்பியல் நோய்களுக்கான 14 படுக்கைகள் கொண்ட நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது.

அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு மையத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் திறந்து வைத்தார்.
ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், பேசிய அமைச்சர் சம்பத் குமார், தமிழகத்தில் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிகிச்சைக்கான ஆண்டு நிதி ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பலர் பயனடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார்,மருத்துவ இயக்குனர் பரந்தாமன் சேதுபதி,சி.ஓ.ஒ.மணி செந்தில் குமார்,மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவு சீனியர் பொது மேலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.




