• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

20 ஆண்டுகளுக்கு பிறகு, பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு..,

ByKalamegam Viswanathan

Oct 4, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 2005-2006-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகளின் சந்திப்பு விழா (Reunion) 20 ஆண்டுகளுக்கு பிறகு, கப்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.

          புது டெல்லி, சென்னை,கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த முன்னாள் மாணவ மாணவியர்கள், தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.இவர்களில் பெரும்பாலானோர் அரசு பதவியிலும்  , மருத்துவத் துறையிலும்,காவல்துறையிலும், தொழிலதிபர்களாகவும் பதவி வைத்து வருகின்றனர்.
  மேலும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் போது, ஆசிரியர் ஆசிரியைகள் தங்களை கண்டித்த விதம் குறித்தும், தாங்கள் அவர்களிடம் பேசிய வார்த்தைகள் குறித்தும், ஞாபகப்படுத்தி விழா மேடையில் பல்வேறு மாணவ, மாணவிகள் பேசி ஆசிரியர்களின் உள்ளத்தை கவர்ந்தனர்.
  தங்களை பல்வேறு பதவிகளுக்கு உயர்த்தி கல்வி வழங்கிய ஆசிரியைகளை கௌரவிக்கும் விதமாக, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் ,கேடயங்கள் வழங்கி மாணவ ,மாணவியர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

விழாவில் முன்னாள் மாணவர்கள் பேசியதாவது:

அரசு பள்ளியில் படித்த நாங்கள் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் எங்கள் ஆசிரியர்கள் தான். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் பழைய நினைவுகளை புதுப்பித்ததுடன், பள்ளிக்கு தேவையான உபகரணங்களை எங்களால் இயன்ற அளவு வழங்கியுள்ளோம்.

எங்களுடன் படித்த மாணவர்களில் காவல்துறையிலும், சிலர் வழக்கறிஞர்களாகவும், ஒருவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராகவும், பலர் ராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வரமுடியாததால் அவர்களுக்காக இந்த வீடியோவை அர்ப்பணிக்கிறோம்.

ஆசிரியை ஜெகதீஸ்வரி பேசியதாவது:

நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன். இங்கு பணி நியமனம் கிடைத்து வந்தபோது அழுதுகொண்டே வந்தேன், ஆனால் போகும்போது மிகுந்த சந்தோஷத்துடன் சென்றேன். என் பிள்ளைகள் என்னை மறக்காமல் அழைத்து சிறப்பித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கிராமப்புறத்தில் எங்கே இருக்கிறது என்று தேடி வரவேண்டிய கப்பலூர் பள்ளியில் இருந்து இன்று உலகறியும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் மன தைரியமும், ஊக்கமும் வேறு எந்த பள்ளி குழந்தைகளுக்கும் இருக்காது. இந்த குழந்தைகள் இன்னும் நல்லபடியாக பள்ளி முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்.

மேலும் இந்த சந்திப்பு ஒரு முறை மட்டுமல்ல, ஆண்டுதோறும் நல்ல விஷயங்களுக்காக கூட வேண்டும் என்றும், பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு உதவ வேண்டும் என்றும் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்று கப்பலூரில் உள்ள அரசு கள்ளர் பள்ளிக்கு முன்னாள் மாணவ மாணவியர்கள் ஒன்று இணைந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புடைய பள்ளிக்கு தேவையான பொருட்களை ( பீரோக்கள், நாற்காலிகள், குடிநீர் (டேங்க்)தொட்டி, பள்ளியறைகளுக்குள் வைப்பதற் கான குடிநீர் கேன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை) டிராக்டரில் ஏற்றி கொண்டு  பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர்.