• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அண்ணல் காந்தியடிகளின் 158-வது ஜெயந்தி விழா- கதர் விற்பனையைத் தொடங்கி வைத்த ஆட்சியர்..,

ByKalamegam Viswanathan

Oct 2, 2026

அண்ணல் காந்தியடிகளின் 158-வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு, மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் இன்று (02.10.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் அண்ணல் காந்தியடிகளின் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வாதாரம் வழங்கிட வேண்டும் என்ற சீரிய நோக்குடன் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தொடங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இவ்வாரியத்தின் கீழ், உசிலம்பட்டி வட்டம் அன்னமார்பட்டியில் கிராமிய நூற்பு நிலையம் ஒன்றும், உசிலம்பட்டியில் கதர் உபகிளையும், மதுரை மேலமாசி வீதியில் கதர் அங்காடியும் செயல்பட்டு வருகின்றன.

அன்னமார்பட்டி கிராமிய நூற்பு நிலையத்தில் 12 ராட்டைகளும், உசிலம்பட்டி கதர் உபகளையில் 11 தறிகளும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரம் உயர்ந்து, வாழ்க்கைத்தரம் மேம்பட்டு வருகிறது. காந்தியடிகளின் கொள்கைகளை முழுமையாகப் பின்பற்றி இத்துறை சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.

மதுரை மாவட்டக் கதர் அங்காடிகள் மூலம் கடந்த ஆண்டு கதர் ரகங்களுக்கான இலக்கு ரூ.105.00 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.68.32 லட்சமும், கிராமப் பொருட்களுக்கான இலக்கு ரூ.40.00 லட்சத்தில் ரூ.35.16 லட்சமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மழைக்காலப் பராமரிப்பு உதவித்தொகையாக, 2025–2026-ஆம் ஆண்டில் 316 பயனாளிகளின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5,000/- வீதம் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது.

அண்ணல் காந்தியடிகளின் ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (02.10.2026) முதல் தீபாவளி முடியும் வரை, பொதுமக்கள் எளிதில் வாங்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்கள் ஆகிய இடங்களில் தற்காலிக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு அசல் வெள்ளி ஜரிகை பட்டுச் சேலைகள், கதர் வேட்டிகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், மெத்தை மற்றும் தலையணைகள், கண்கவரும் கதர் பட்டு ரகங்கள், கதர் பாலியஸ்டர், கம்பளி (உல்லன்) ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அக்மார்க் சான்று பெற்ற சுத்தமான தேன், குளியல் சோப்புகள், சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் உள்ளிட்ட பனை உற்பத்திப் பொருட்களும் கிடைக்கின்றன.

மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கதர், பாலிவஸ்திரா மற்றும் பட்டு ரகங்களுக்கு 30%வரையிலும், கம்பளி (உல்லன்) ரகங்களுக்கு 20% வரையிலும் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அரசுப் பணியாளர்களுக்கு வசதியாக, 10 மாதச் சம தவணைகளில் ஊதியத்தில் பிடிக்கும் வகையில் கடன் விற்பனை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு கதர் விற்பனை இலக்காக ரூ.35.00 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை முடியும் வரை அனைத்துக் கதர் அங்காடிகளும் விடுமுறையின்றி முழுமையாகச் செயல்படும். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க, பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கதர் ரகங்களை வாங்கி ஆதரவளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கதர் கிராமத் தொழில்கள் வாரிய மதுரை உதவி இயக்குநர் திரு.இரா.பாலமாணிக்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.