புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் நிலையப்பட்டி கிராமம். பலதரப்பு மக்கள் இங்கு வசித்து வந்தாலும் விவசாயத்தை தவிர வேறு வழி அவர்களுக்கு எதுவும் கிடையாது.

இந்த நிலையில் தான் அவர்கள் குடியிருக்கும் இடம் மட்டுமல்லாது காலம் காலமாக விவசாயம் செய்து வந்த நிலங்களும் பறிபோகும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதால் இப்போது அவர்கள் போராட்டத்தை தவிர வேறு வழியில்லை என்கிற நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வயலோகம் அண்ணா பண்ணையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமம் விவசாயத்திற்கு பெயர் பெற்ற நிலையில் இருந்தாலும் அந்த நிலங்களை தங்களது சொந்தமில்லை என்கிற போது அவர்கள் வருத்தப்படத்தான் செய்வார்கள்.
இந்த கிராமத்தில் உள்ள 462 ஏக்கர் நிலம் தனக்குத்தான் சொந்தம் என்று பழனியப்பன் செட்டியார் என்பவர் 1965 ஆம் ஆண்டு விளக்கு தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பை அவருக்குச் சாதகமாக பெற்றிருக்கிறார். அந்த நிலம் வெறுமனே இருந்தால் அவர் எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். அவர் குறிப்பிட்டு இருக்கும் 462 ஏக்கர் நிலத்திலும் நிலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்து பறையர் வகுப்பைச் சேர்ந்த 60 குடும்பங்களும் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த 47 குடும்பங்களும் நாயக்கர் வகுப்பைச் சேர்ந்த 30 குடும்பங்களும் முத்துராஜா இனத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களும் வெள்ளாளர் குடும்பம் ஒன்றும் கள்ளர் இனத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களும் உட்பட சுமார் 200 குடும்பங்கள் அந்த நிலங்களில் வீடு கட்டியும் விவசாயம் செய்தும் காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இப்போது அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று சொல்வதோடு மட்டுமல்லாது அதில் வீடு கட்டி இருக்கும் சுமார் 20 குடும்பங்களுக்கு மின் இணைப்பு கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள் என்பது கூடுதல் செய்தி ஆகும்.

இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னையா என்பவர் கூறுகையில் நாங்கள் எங்கள் ஊரில் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். மின்வாரியம் எங்களுக்கு தற்காலிக மின்சாரம் கூட வழங்க மறுத்து வருகிறது. காரணம் என்னவென்றால் அந்த நிலங்களை தனக்கு சொந்தமானது என்று ஒருவர் போராடி வருகிறார். அவர் பெயர் பழனியப்பன். எங்களுக்கும் மற்ற ஊர்களில் வீடுகளில் உள்ளபடி மின்சாரம் வழங்க வேண்டும் என்று 1963ல் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் கிடைத்தபாடில்லை. நாங்கள் கிராம நிர்வாகம் அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அவர்களும் எங்களுக்கு முறையான பதில் சொல்வதில்லை. உளுந்தவனுக்கே நிலம் சொந்தம் என்று நாங்கள் போராடுகிறோம். ஒரு காலத்தில் இந்த நிலங்களை நிலத்தில் உரிமையாளர்கள் வாரத்திற்கு விட்டு இருப்பார்கள். ஆனாலும் விவசாயம் செய்த வகையில் எங்களுக்கு தான் வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். எங்கள் கிராமம் மட்டுமல்ல அருகில் உள்ள குன்னக்குடிப்பட்டி, பெருஞ்சுனை, சித்தூர் போன்ற கிராமங்களில் பலருக்கு பட்டா வழங்கி விட்டார்கள்.
சிலருக்கு வழங்கவில்லை. நிலையப்பட்டி, கார்ணாப்பட்டி கரியாப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு பட்டா வழங்காமல் இருக்கிறது. இது பழனியப்பன் செட்டியார் மட்டுமல்ல வேறு சிலரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதில் அவர்களுக்கு சொந்தமானது என்றும் விவசாயம் செய்தவர்களுக்கு வழங்கலாம் என்றும் சொல்லி இருப்பதால் பல பிரச்சினைகள் தீர்ந்து இருக்கின்றன சில பிரச்சனைகள் தீரவில்லை என்று வருத்தத்தோடு கூறினார்.
அதை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் கூறுகையில் புல்வயல் ஊராட்சியில் உள்ள இந்த நிலையைப் பற்றி கிராமத்தில் 269 குடும்பங்கள் காலம் காலமாக வாழையடி வாழையாக வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா இல்லாததால் எந்த ஒரு அரசு சலுகைகளும் பெற முடியவில்லை, அடிப்படை வசதிகளும் பெற முடியவில்லை என்பதோடு சில குடும்பங்களில் மின் இணைப்பு கூட கிடைக்காத நிலையில் அவதிப்பட்டு வருகிறோம். 1963ஆம் ஆண்டு மேஜர் இனாம் மைனர் இனாம் என்று ஒதுக்கப்பட்டதில் எங்களது கிராமம் மனித இனாம் என அடையாளப் படுத்தப்பட்டு விட்டது. நாங்கள் குடியிருந்து வரும் நிலங்களுக்கு தனிநபர் ஒருவர் வழக்குப் போடுவதும் அரசு அதிகாரிகள் மெத்தனப் போக்கு காட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

பழைய வீடுகளுக்கு மின்சாரம் கிடைத்து விட்டாலும் இப்போது ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட புதிய வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. இது மட்டுமல்ல நாங்கள் விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு மத்திய மாநில அரசுகளின் பிரச்சினை நிவாரணமோ, வெள்ள நிவாரணமோ, பயிர்க் காப்பீட்டு திட்டங்களோ எந்த ஒரு அரசின் திட்டங்களும் கிடைப்பதில்லை. எங்க பிரச்சனைகளுக்கான அனைத்துக்கும் ஒரே தீர்வாக எங்களுக்கு பட்டா வழங்குவது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறோம். இந்த நிலங்கள் அனைத்தும் அரசுப் புறம்போக்கு என்று தான் பதிவேடுகளில் ஏற்கனவே இருக்கின்றனவே தவிர தனிநபர் பெயர் இல்லை. எனவே இப்போதுள்ள அரசு எங்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்றார்.




