கோவையில் ஹெல்மெட் அணியாமல் ஒரே ஸ்கூட்டியில் கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தையுடன் சென்ற பெண்ணை பார்த்துப் பத்திரமாகச் செல்லுமாறு எச்சரித்த அரசுப் பேருந்து ஓட்டுநரிடம், அந்தப் பெண் நடுரோட்டில் பேருந்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அண்ணா சிலையில் இருந்து ஆர்.டி.ஓ ஆபீஸ் வழியாகக் காந்திபுரம் நோக்கி 96 எண் கொண்ட அரசு நகரப் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்திற்கு முன்னே பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியை ஓட்டிச் சென்று உள்ளார். அந்த வாகனத்தின் பின் சீட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும், ஒரு குழந்தையும் என மொத்தம் மூன்று பேர் பயணித்து உள்ளனர்.
பேருந்தின் அருகே ஆபத்தான முறையில் ஸ்கூட்டி சென்றதால், அரசுப் பேருந்து ஓட்டுநர் ஓரத்தில் வந்து கொண்டு இருந்த பெண்ணைப் பார்த்து, “மேலே கூட மோதி உரசிட போறீங்க… பார்த்து கவனமா போகக் கூடாதா?” என அதட்டிக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
ஓட்டுநர் எச்சரித்ததால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண், உடனடியாகத் தனது இருசக்கர வாகனத்தை அரசுப் பேருந்திற்கு முன்பாகக் குறுக்காக நிறுத்தி விட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் சொல்லி ஓங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு அரசுப் பேருந்து ஓட்டுநர் அமைதியாக, “ஹெல்மெட் எதுவும் அணியாமல் கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தையை ஏற்றிக் கொண்டு 3 பேர் ஆபத்தான முறையில் செல்கிறீர்களே, நாளைக்கு அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் யார் பதில் சொல்வது ?” என்று நியாயமாகக் கேட்டு உள்ளார். அதற்கு அந்தப் பெண், “அது எங்களுக்குத் தெரியும்; உங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்க… ஹெல்மெட் போடலைனா போலீஸ்க்கு நாங்க அபராதம் (Fine) கட்டிக்கிறோம், கேட்க நீங்க யாரு?” எனக் கூறி தொடர்ந்து ஆவேசமாகப் பேசி உள்ளார்.
முக்கியச் சாலையில் அரசுப் பேருந்தை மறித்துப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அண்ணா சிலை – காந்திபுரம் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தலையிட்டு, அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்தி வழி விட்டுப் பேருந்தை அனுப்பி வைத்தனர்.