மதுரை மாநகரின் முக்கிய வீதிகளில் நடைபாதையில் பாதையோட சில வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் போட்டு வியாபாரம் செய்வதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

மாநகர ஆணையாளர் கௌரவகுமார் ஆலோசனையின் பேரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய யுக்திகளை கையாள வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அதன் படி மாநகராட்சி ஊழியர்கள் அபு, கண்ணன், கார்த்திக் ஆகியோர் நடந்து சென்று ஒலிப்பெருக்கி (மைக்செட்) மூலம் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் அறிவிப்பு செய்தனர்.

நடைபாதைகள் பொதுமக்களுக்கே: சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காகவே நடைபாதைகள் (Footpaths) அமைக்கப்பட்டுள்ளன.
கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடைப் பொருட்களை நடைபாதையிலோ அல்லது சாலையை ஆக்கிரமித்தோ வைக்கக் கூடாது என எச்சரிக்கப்படுகிறது. மீறினால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்:
நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், கடைகளின் நீட்டிப்புகள் மற்றும் தள்ளுவண்டிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். மீறினால், ஆக்கிரமிப்புப் பொருட்கள் அனைத்தும் எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.
சட்டப்படியான நடவடிக்கை: ஆக்கிரமிப்பு செய்யும் நபர் மீது சட்டப்படி கடுமையான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து படி சென்றனர்.

இது சம்பந்தமாக அதிகாரிகள் கூறும் போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. சாலையோர சிறு வியாபாரிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து வருகிறார்கள். இதனால் மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். புகார்களும் நிறைய வருகிறது. அதனால் புது முயற்சியாக ஊழியர்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து வைத்து வருகிறோம், தினமும் காலை மாலை இருவேளைகளிலும் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து மீறினால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினர்.



