மதுரை மாநகராட்சியில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் என 10 பேரிடம் ரூ.1.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாநகராட்சி தலைமை பொறியாளர் (சி.இ.,) அலுவலகத்தில் நேற்று இரவு சி.இ., ராமசாமிக்கு லஞ்சப் பணம் கொடுக்க இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சத்யசீலன், இன்ஸ்பெக்டர்கள் சூர்யகலா, ரமேஷ்பிரபு, ஜெயப்ரியா ஆகியோர் கொண்ட குழு சி.இ., அலுவலகத்தில் சோதனை நடத்தியது. அப்போது சி.இ., யை பார்க்க வந்த பலர் பணம் வைத்திருந்தனர்.
அவர்களில் உதவி பொறியாளர்கள் பாலமுருகனிடம் ரூ.11 ஆயிரம், மயிலேறிநாதனிடம் ரூ.17 ஆயிரம், தொழில் நுட்ப உதவியாளர்கள் திருமுருகன் ரூ.5 ஆயிரம், கார்த்திக் ரூ.19 ஆயிரம், செல்வக்குமார் ரூ.8 ஆயிரம், ஒப்பந்ததாரர்கள் ராஜாராம் ரூ.5 ஆயிரம், ரமேஷ் ரூ.13 ஆயிரம், ராதா ரூ.35 ஆயிரம், கருப்பசாமி ரூ.25 ஆயிரம், காண்ட்ராக்ட் பணியாளர் வினோத்மணி ரூ.7 ஆயிரம் வைத்திருந்தனர். அதற்கான உரிய கணக்கு அவர்களிடம் இல்லை. இதையடுத்து 10 பேரிடமிருந்தும் கணக்கில் வராத ரூ.1.35 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மாத்திரை வாங்க வைத்திருந்த பணமா மாநகராட்சி அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்துள்ளதாக மாலை 6:00 மணிக்கே தகவல் கிளம்பியது. அப்போது கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் பொறியாளர் பிரிவிற்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் சி.இ., உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்து இரவு 7:30 மணிக்கு மேல் சி.இ., உட்பட பிற அதிகாரிகள் சி.இ., அலுவலகம் சென்றனர். இத்தகவல் அறிந்து கீழ்தளத்தில் காத்திருந்த ஒப்பந்ததாரர்களும் சி.இ., அலுவலகத்தில் குவிந்தனர்.
இதில் சிக்கிய பாலமுருகன் மண்டலம் 5ன் உதவி செயற்பொறியாளராகவும், மயிலேறிநாதன், 100 வார்டுகளுக்கும் பாதாள சாக்கடை பணிக்கான உதவி செயற்பொறியாளராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தனர். மயிலேறிநாதன், தனக்கு மாத்திரை வாங்குவதற்காக பணம் வைத்திருந்ததாக தெரிவித்தார்.

பணம் வைத்திருந்த அனைவரும் சி.இ., ராமசாமிக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த லஞ்சப் பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பணத்திற்கான உரிய கணக்கு காட்டாவிட்டால் சி.இ., ராமசாமி உட்பட 11 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.



