அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்தேறியுள்ளது. இவ்விழாவுக்கான அழைப்பிதழ் தொடங்கி இப்பெருவிழா நடந்தேறி முடிந்தது வரை எத்தனையோ கருத்துகளும் விமர்சனங்களும் விவாதங்களும் பொதுத்தளத்தில் தொடர்ந்து நடந்துவருவதைப் பார்க்கிறோம்.
திருக்குட முழுக்குப் பெருவிழா குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் விழாவுக்கு முன்னதாக இரண்டு பதிவுகளை வெளியிட்டேன், இரண்டு முறை நிர்வாக ரீதியான ஆய்வு நடத்தினேன். அந்த ஆய்வின் பொழுது நான் சொன்ன ஆலோசனைகளைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளவில்லை. அந்த ஆய்வின் நோக்கம் குறுகிய அரசியல் பயன்பாட்டுக்கானது அன்று. இவ்விழா சிறப்புற நடந்தேற வேண்டும் என்பது மட்டுமே. எனவே ஆக்கபூர்வமான செயல் மற்றும் பங்களிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.

விழாவுக்கு மூன்று வாரத்திற்கு முன்பு எனது முதற்பதிவு தென்னக இரயில்வேயின் பொதுமேலாளருக்கு எழுதிய கடிதம் சம்பந்தமானது. திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவுக்காக மதுரைக்குச் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதும் விழாவுக்கு வரும் பக்தர்களின் நலன்கருதி மதுரை இரயில்நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் சம்பந்தப்பட்டதும் ஆகும். இந்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன. எனது கோரிக்கையை ஏற்று செயல்படுத்திய தென்னக இரயில்வேயின் நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயக காலத்து நியதி
இரண்டாவது பதிவு வீரவசந்தராயர் மண்டப திறப்பு விழா முடிந்ததும் வெளியிட்டேன். இதற்கு கலைரீதியாகவும், வரலாற்றுரீதியாகவும் முக்கியமான காரணங்கள் உண்டு. 1877ஆம் ஆண்டு நடைபெற்ற கோவில் கும்பாபிசேகந்தான் நவீனகால வரலாற்றில் முறையான பதிவுகள் இருக்கிற பெருவிழா. அந்த கும்பாபிசேகத்திற்கும் இந்த2026ஆம் ஆண்டு திருக்குட முழுக்கு விழாவுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமையுண்டு. அதுவரை கட்டிமுடிக்கப்படாமல் இருந்த மொட்டைக்கோபுரம் என்று அழைக்கப்பட்ட வடக்குக்கோபுரம் ஏழுகோவில் நகரத்தாரால் (சுமார் பத்தாண்டு காலமாக) கட்டிமுடிக்கப்பட்டு அதன் பின்னர் நடைபெற்ற கும்பாபிசேகம் 1877ஆம் ஆண்டில் நடந்த கும்பாபிசேகம். அந்தக் கும்பாபிசேகம் பற்றி எனது காவல்கோட்டம் நாவலில் மிகவிரிவாக எழுதியுள்ளேன். மதுரையின் அரசியல், நிர்வாகம், ஆன்மீகம் உள்கட்டமைப்பு ஆகியவை பற்றிய மிகச்சிறந்த பகுதியது. தாதுவருஷ பஞ்சத்தால் பேரழிவை சந்தித்த மதுரை அந்த கொடும்நினைவில் இருந்து மீண்டு, சந்தித்த முதல் பெருவிழா அந்தக் கும்பாபிசேகம். இழப்பின் வலியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் மீண்டெழுந்து மதுரையின் மாசிவீதிகளில் பூப்பல்லக்குகள் ஆனந்தக்கொண்டாடமாக வலம்வந்த விழா அது.
1877ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் ஏழாவது திருக்குட முழுக்கு விழா இப்பொழுது நடந்துள்ளது. ஆனால் 150 ஆண்டுகளுக்கு பின்னர் இப்பொழுது ஒரு பெருங்கட்டுமான பணி நடந்து அதன் தொடர்ச்சியாக 2026ஆம் ஆண்டுத் திருக்குட முழுக்கு விழா நடைபெறுகிறது. வீரவசந்தராயர் மண்டபம் எரியுண்ட பிறகு மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு இப்பொழுது இத்திருக்குட முழுக்கு விழா நடைபெறுகிறது.
மன்னராட்சி காலத்தில் இந்த மன்னரால் இந்தக் கோபுரம் அல்லது மண்டபம் கட்டியெழுப்பப்பட்டது என்று பதிவாவதைப் போலவே இப்பொழுதும் நிகழ்ந்து விடக்கூடாது. திமுக ஆட்சிக்காலத்தில் மாண்புமிகு முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது நிதி ஒதுக்கி, கட்டியெழுப்பப்பட்டு, தவெக ஆட்சி காலத்தில் மாண்புமிகு முதல்வராக ஜோசப் விஜய் இருக்கும் போது திறக்கப்பட்ட மண்டபம் என்று மட்டுமே பதிவாவது ஜனநாயக காலத்து நியதி அன்று. இப்பெருமண்டபத்தை கட்டியெழுப்பிய கலைஞனைப்பற்றிய பதிவு மிகமுக்கியமானது எனக் கருதியே தலைமைச்சிற்பி திரு வேல்முருகன் அவர்களின் பணியைப் பதிவுசெய்தேன். எனது பதிவைத் தொடர்ந்து முக்கிய ஆங்கில இதழில் அவரது நேர்காணலும் அவர் பற்றிய குறிப்பும் வெளிவந்தது மகிழ்ச்சி. நானறிந்த வரை மீனாட்சி அம்மன் ஆலய கட்டுமானத்தில் இதுவரை ஆட்சிநடத்தியவர்களின் பெயர்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இம்மாபெரும் கலைப்பொக்கிசத்தை கட்டியெழுப்பிய கலைஞர்கள், ஓவியர்கள் யாருடைய பெயரும் வரலாற்று குறிப்பில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. அந்த வகையில் வீரவசந்தராயர் மண்டபத்தை உருவாக்கித்தந்த சிற்பியை நினைவுகூர்வது மிகமுக்கியப்பணி எனக்கருதியே இப்பதிவை மேற்கொண்டேன்.
அழைப்பிதழில் பெயர்
இப்பதிவினைத் தொடர்ந்து விழாஅழைப்பிதழில் அறங்காவலர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறாததைப்பற்றி பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அக்கட்டுரை எழுதப்பட்டு ஓரிரு நாள்களுக்குப் பின்னர்தான் எனக்கு அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றது. அதற்குள் நீதிமன்றம் வரை சென்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன.
அறநிலையதுறையானது, அழைப்பிதழில் அறங்காவற்குழுத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் பெயர்களைப் போடாதது தவறு. அழைப்பிதழில் இடம்பெற்ற 36 பெயர்களில் 19பெயர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளின் பெயர்கள். இவ்வளவு பெயர்களைப் போடும்போது அறங்காவற்குழுவினரின் பெயரைப் போடாதது அறிந்தே நிகழ்ந்த ஒன்று என்பது வெளிப்படையானது. திருப்பணியானது குறுகிய அரசியலுக்கான இடமன்று என்ற பொறுப்போடு அறநிலையத்துறை நடந்திருக்க வேண்டும்.
அழைப்பிதழில் பெயர் இடம்பெறாதது மட்டுமன்று, பெயர் இடம்பெற்றதும் விவாதத்திற்குரிய மிகமுக்கிய விசயம் என்றே கருதுகிறேன். அழைப்பிதழில் 12 ஆன்மீகப் பெரியவர்கள், 9 ஆகமப் பண்டிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இப்பெருவிழாவுக்கான அடிப்படைப் பணிகளான கோபுரங்கள் மற்றும் கோவில் முழுமையையும் செப்பனிடும் திருப்பணியைச் செய்துமுடித்துள்ள ஸ்தபதிகளின் சிற்பிகளின் பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. எரியுண்ட வீரவசந்தராயர் மண்டபத்தை மறுஉருவாக்கம் செய்துதந்துள்ள தலைமைச் சிற்பி உள்ளிட்ட யார் பெயரும் இடம்பெறவில்லை.
இத்திருப்பணிக்கான மொத்தச் செலவில், சரிபாதிச் செலவைச் செய்தவர்கள் கொடையாளர்கள். அவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை.
இத்திருக்கோயிலுக்கு மரபுவழி முதலுரிமைகொண்ட மதுரை ஆதீனத்தின் பெயர் ஆறாவதாக இடம்பெற்றுள்ளது. தமிழ்ச்சைவ சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளாத அத்வைத மடங்களான காஞ்சி காமகோடி, சிருங்கேரி சாரதா பீடாதிபதிகளின் பெயர்கள் முதன்மையாக இடம்பெற்றன.
மக்கள் பிரதிநிதிகள் அனைவரின் பெயர்களும் இடம்பெற்று உள்ளன. மாவட்ட ஆட்சியரின் பெயரும் மாநகராட்சி ஆணையரின் பெயரும் இருந்தன; ஆனால், காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இவையெல்லாம் பெயர்கள் இடம்பெற்றது, பெறாதது சார்ந்த விவரங்கள். ஆனால் முக்கியமான கேள்வி, திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா அழைப்பிதழில் மக்கள் பிரதிநிதிகள் பெயர்கள் ஏன் இடம்பெற வேண்டும்? அரசு அதிகாரிகளின் பெயர்கள் ஏன் இடம்பெற வேண்டும்? மடாதிபதிகளின் பெயர்கள் ஏன் இடம்பெற வேண்டும்?
திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா என்பது சமயஞ்சார்ந்த சடங்கு. இதில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வழிபட முடியும்; கலந்துகொண்டு சிறப்பிக்க முடியாது. அப்படியிருக்க, “கலந்துகொண்டு சிறப்பிப்பவர்கள்” என்ற பெயரிடப்பட்டியல் தேவையற்றது.
மாவட்ட ஆட்சியர் தொடங்கி அறநிலையத்துறை அதிகாரி வரை அனைவரும் இப்பணியைச் செய்துமுடிக்க வேண்டிய கடமையுள்ள அரசுப்பணியாளர்கள்; பங்கேற்று சிறப்பிப்பவர்கள் அல்லர்.
இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக விழாகளில் அரசின் மரபுசார் (Protocol) பெயர் வரிசைகள் இடம்பெறலாம்; சமய விழாகளில் அரசின் மரபுசார் பெயர் வரிசைகள் இடம்பெறுவது பொருத்தமற்றது.
கோவில்களில் வருடம் முழுவதும் நடக்கிற சித்திரை திருவிழா, தெப்பத்திருவிழா போன்றவிழாகளின் அழைப்பிதழ்களில் சமய நடைமுறை மட்டுமே இடம்பெறுகிறது. அதே போன்றே திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா அழைப்பிதழும் இருக்க வேண்டும்.
அதேபோன்று திருக்குட நன்னீராட்டு விழாவில் விழா நடக்கும் கோயிலுக்குத் தொடர்பற்ற மடத்துத் தலைவர்களின் பெயர்கள் ஏன் இடம்பெற வேண்டும்? அப்படி இடம்பெற சைவ, வைணவ, வேதாந்த மடத்துத் தலைவர்கள் அனைவரின் பெயரையும் போடுவதாக இருந்தால் அந்த எண்ணிக்கைக்கு எல்லை ஏது? குறிப்பிட்ட மடாதிபதிகளின் பெயரை மட்டும் போடுவதாக இருந்தால் அந்தத் தேர்வு யாருடையது என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. பெயர்விளங்க ஒளிர்தல் துறவுநிலையின் தத்துவச்சாரத்திற்கு எதிரானதென்றே ஆன்மீகமரபு போதிக்கிறது.
பெயர் என்பது அங்கீகாரம் மற்றும் அதிகாரத்தின் குறியீடாக இருப்பதால் அஃது அரசியலோடு இரண்டறக் கலந்தே இருக்கும். இறைப்பணியில் பக்தியும் சேவையுமுமே முன்னிலை பெறவேண்டும்; அடையாளமும் அங்கீகாரமும் முன்னிலை பெறவேண்டியது இல்லை எனக் கருதுவோர் இக்கருத்தை நல்லெண்ணத்தோடு பரிசீலிப்பர் என நம்புகிறேன்.
விழா ஏற்பாடுகள்
திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவுக்கு முந்தைய நாள்களில் நானும் மதுரை மாநகராட்சியின் பொறுப்பு மேயர் தோழர் நாகராஜன் அவர்களும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளோடு ஆய்வுசெய்தோம். அந்த ஆய்வில் ஆலோசனைகளையும் மாற்றங்கள் சிலவற்றையும் தெரிவித்தோம். திருக்குட முழுக்கு போன்ற பெரிய சமயநிகழ்வில் பொறுப்புணர்வு மிக்க பங்களிப்பு செய்யவேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம் என்ற உணர்வோடு எங்களது பணியை ஆக்கபூர்வமாக மட்டுமே முன்வைத்தோம்.
மாநகராட்சி நிர்வாகத்தைப் பொறுத்த வரை விழாவுக்கான பெருங்கூட்டத்தையும் அதை முன்னிட்டு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் என்ற வகையில் குடிநீருக்காக 120 இடங்களில் ஆர்ஓ குடிநீர் வசதி, 70 நடமாடும் கழிப்பறைகள் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 24க்கும் அதிகமான நிரந்தர கழிப்பறைகளை மராமத்து செய்யப்பட்டன. திடக்கழிவு மேலாண்மைக்காக (SWM) 1181 பணியாளர்களும் 56 வாகனங்களும் திரவக்கழிவு மேலாண்மைக்காக 5 வாகனங்களும் திருவிழாவுக்கான சிறப்பு ஏற்பாடாக பிற மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
54 தற்காலிக மருத்துவ மையங்கள், 12 ஆம்புலனஸ், 2 பைக் ஆபுலன்ஸ் ஆகியவை நான்கு வெளிவீதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 50 இடங்களில் கியூஆர் கோடு முறையில் அனைத்து தகவல்களும் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இவற்றில் சில பயன்பாடில்லாமல் போயிருக்கலாம், ஆனால் தேவைப்படும் இடத்தில் இல்லாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு எழவில்லை.
திருக்குட முழுக்கு நாளில் காலையில் கிழக்குக்கோபுர வாசலின் எதிரில் நிலத்தடிவடிகால் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு நீர் பொங்கிவெளிவந்த போது அடுத்த பத்து நிமிடத்தில் அது சரி செய்யப்பட்டதும் செய்தி வெளிவந்தவுடன் பொறுப்பு மேயர் தோழர் நாகராஜன் உடன் அங்கு போய் நின்று பணிமுடிந்த பிறகுதான் அங்கிருந்து அகன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிய இப்பெருவிழாவை முன்னிட்டு கோயிலைச் சுற்றிய பகுதிகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கித் தந்ததில் மாநகராட்சியின் பணி பாராட்டும்படி அமைந்தது.
அதே போன்று இவ்வளவு பெரும்விழா நிகழ்வில் ஒப்பீட்டளவில் தள்ளுமுள்ளு உள்ளிட்டவை நிகழாமலும் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நிகழாமலும் கூட்ட நெரிசலை முறையாகக் கையாள 205க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொறுத்தி, மிகவிரிவான, நவீன கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி நிலைமையை கையாண்டது காவல்துறை. அதே நேரத்தில் விழாவுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல் என்ற கோணத்தில் அணுகுவதற்கும் முறைப்படுத்துதல் என்ற கோணத்தில் அணுகுவதற்கும் வேறுபாடு உண்டு. பெரும்பாலும் காவல்துறை முதல் அணுகுமுறையையே கடைபிடிக்கிறது. இரண்டாவது அணுகுமுறைதான் களத்தில் மக்களுக்குத் தேவையான ஒன்று. இந்த இடத்தில்தான் விழாவை நடத்தும் துறைக்கும் காவல்துறைக்குமான அணுகுமுறையில் வேறுபாடு உருவாகிறது. இந்த வேறுபாடு எந்த அளவுக்கு குறைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு மட்டுமே பிரச்சனை குறையும்.
இப்பெருவிழாவுக்காக வாரக்கணக்கில் உழைத்திட்ட அனைத்துத்துறை அரசு ஊழியர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறைப்பாடுகள்
அதே நேரம் இந்த விழாவில் குறைபாடுகளே இல்லை, எல்லாம் சரியாகவே நடந்தது என்று யாரும் வாதிட முடியாது. குறைபாடுகளை நேர்மறையாக ஏற்றுக்கொள்வதும் அதிலிருந்து படிப்பினைகள் பெறுவதும்தான் முக்கியம். சில குறைபாடுகள் திட்டமிடலில் நடந்த தவறுகள். சில குறைபாடுகள் செயலாக்கத்தில் நிகழ்ந்தவை.
1.தீர்த்தநீர் தெளித்தல்
திருக்குட முழுக்கு விழா என்பதன் முக்கியச் சடங்கு வேள்வியில் உருவாக்கப்பட்ட சக்தியை கும்பங்களில் நீர்மூலம் சுமந்துசென்று கோபுரத்தின் மீதிருக்கும் திருக்குடங்களுக்கு நன்னீராட்டுதல்.
கோபுரங்களின் மீது நன்னீராட்டு முடிந்ததும் அங்கிருந்து தெளிக்கப்படும் இந்நன்னீர் துளிகளே பக்தர்கள் தீர்த்தமாக ஏற்கின்றனர். மதுரை திருக்குட முழுக்கு விழா முடிவுற்ற பின்னர் நாண்கு கோபுரங்களின் எதிர் உள்ள வீதிகளில் குவிந்திருந்த மக்களின் மீது தீர்த்தநீர் எதுவும் தெளிக்கப்படவில்லை. இது பக்தர்களை கோபப்படுத்தியது. தாங்கள் புனிதமாக கருதும் ஒன்று தங்களுக்கு கிடைக்காதனால் ஏற்பட்ட ஆவேசத்தை வெளிப்படுத்தினர். பக்தர்களின் உணர்வு நியாயமானதே.
திருக்குட முழுக்குத் தீர்த்ததைத் தெளிக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து முன்னதாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நாங்கள் கேட்டபோது டிரோன் மூலம் தெளிக்க ஏற்பாடு உள்ளதாக கூறினர். ஆனால் அது நடைமுறையாகவில்லை. திருக்குட முழுக்கு விழா தொடங்கிய சிறிதுநேரத்தில் அம்மன் சந்நிதி கோபுரத்தின் மேல பறந்துகொண்டு இருந்த டிரோன் ஒன்று சிதைந்து விழுந்தது. அதனால் பதட்டமடைந்து இம்முயற்சி கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.
திருக்குட முழுக்கு நன்னீரைப் பக்தர்களுக்குத் தெளிக்கும் செயலின் சிறந்த உதாரணமாக 2023ஆம் ஆண்டு பழனிகோவில் திருக்குட முழுக்கு விழாவைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அங்கு டிரோன் மூலம் தீர்த்தநீரையும் ஹெலிஹாப்டர் மூலம் பூக்களையும் பக்தர்கள் மேல் தூவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்முறை இங்கும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். அது பின்பற்றப்படாதது மட்டுமன்று, தீர்த்தநீர் தெளிக்கப்படாததால் கோபமடைந்த மக்களை அமைதிப்படுத்த அண்டாவில் இருந்த தண்ணீரை மக்கள்மீது தெளிக்கும் செயலில் காவல்துறையைச் சார்ந்த சிலர் ஈடுபட்டது கேலிக்கூத்தான ஒன்று.
- சித்திரைவீதிகளில் பக்தர்களை அனுமதிக்காதது
அதே போன்று சித்திரைவீதியில் பக்தர்களை முற்றாக அனுமதிக்காதது சரியான முடிவன்று. ஆடிவீதி கோவில் நிர்வாகத்திற்கானது. சித்திரைவீதி மாநகராட்சி நிர்வாகத்திற்கானது, இதில் உள்ள நிர்வாக முரண்களால் கடந்த காலங்களில் நிறையப் பிரச்சனைகள் ஏற்பட்டதுண்டு. அவற்றை முறியடித்துத்தான் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டன. உதாரணமாக சித்திரைத் திருவிழாவின் போது கோவில்நிர்வாகம் சார்பில் சித்திரைவீதிகளின் நான்கு பக்கங்களிலும் முழுமையாகப் பந்தல் அமைக்கும் முடிவு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இந்த முறை சித்திரைவீதி முழுவதையும் அடைக்கக் காவல்துறையின் கண்ணோட்டத்தை அடிப்படையாகக்கொண்டு முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அது சரியான முடிவன்று. சித்திரைவீதியில் மக்களை திருக்குட முழுக்கு நிகழ்வைக்காண அனுமதித்திருக்க வேண்டும். - விஐபி கலாச்சாரம்
இரண்டாவது முக்கிய பிரச்சனை விஐபி கலாச்சாரம். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் விழாவில் அனைவரையும் திருக்குட முழுக்கு நன்னீராட்டின்போது கோயிலின் மேற்கூரைக்கு அனுமதிக்க வாய்ப்பில்லை. கோவில் மேற்கூரையின் இடவசதி, தாங்குந்திறன் இரண்டையும் பொதுப்பணித்துறை மதிப்பிட்டுக் கொடுத்த எண்ணிக்கையின் அடிப்படையில் 11 ஆயிரம் பேரை அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்கிறது. எனவே 11 ஆயிரம் பேருக்கு பாஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதில் இரண்டாயிரம் பாஸ் பொதுமக்களுக்காக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மீதம் உள்ள 9 ஆயிரம் பாஸ்கள் யாரால் எந்த அடிப்படையில் பிரித்துதரப்பட்டது என்பதில் வெளிப்படைத்தன்மை தேவை. பாஸ் வழங்குவதை யார் தீர்மானித்தார்கள் என்ற கேள்விக்கு யாரும் பொறுப்பேற்கப் போவதில்லை. அந்த வெளிப்படைத்தன்மை இல்லாத வரை அரசின் மீதான குற்றச்சாட்டு அகலாது.
பாஸ் எந்த அடிப்படையில் பிரித்துத் தந்தாலும் அதன் மீது விமர்சனம் வரத்தான் செய்யும். ஆனால் அடிப்படையே வெளியில் தெரியாத மர்மமாக இருந்தால் கடுங்குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்யும். குறிப்பாக கோயிலுக்கு பொறுப்பு அதிகாரியை விழாவுக்கு முந்தைய இரண்டு நாள்களில் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது போன் செயலில் இல்லை. எங்களது எந்த ஆய்வு நிகழ்விலும் அவர் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினராக எனக்கு தரப்பட வேண்டிய “பேட்ஜ்” தரப்படவில்லை. நான் பேட்ஜ் அணியாமல்தான் விழாவில் பங்கேற்றேன். அதை ஒரு பிரச்சனையாக நான் கருதவில்லை. இவ்வளவு பெரியநிகழ்வில் இதுபோன்ற கவனக்குறைவு இருக்கத்தான் செய்யும். ஆனால் அதனைக் கூப்பிட்டுக் கேட்கவேண்டியவரை யாராலும் தொடர்புகொள்ள முடியாதது முக்கிய பிரச்சனை.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால், பேட்ஜ் இல்லாவிட்டாலும் காவலர்கள் என்னை உள்ளே அனுமதித்துவிட்டனர். ஆனால் இப்பெரும் நிகழ்வுக்கு நன்கொடை வழங்கிய அனைவருக்கும் பாஸ் போய்ச்சேர்ந்ததா? கிடைக்காதவர்கள் என்ன செய்திருப்பார்கள்? யாரைத் தொடர்புகொண்டு கேட்டிருப்பார்கள் என்று யோசித்தால் கவலையே மிஞ்சுகிறது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டவர்களுக்கு அவமதிப்பு நடந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இஃது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் இந்த விஐபி முறையில் இதுபோன்ற அவமதிப்புகள் நிகழத்தான் செய்யும். பல லட்சம் பக்தர்கள் காத்திருக்க 11ஆயிரம் பேர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். திருக்குட முழுக்கு முடிந்தவுடன் கோயிலின் மேற்கூரையிலிருக்கும் அந்த 11ஆயிரம் பேரில் இருந்து சுமார் இரண்டாயிரம் பேர் மட்டும் சன்னதியில் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். சன்னதிக்கு முன் உள்ள மண்டபத்தில் அதிகபட்சம் நூறு பேர் இருக்கலாம். அப்படியென்றால் 2000 பேரில் முண்டியடித்துக்கொண்டு போகிற 100 பேருக்கு மட்டுமே முதல்தரிசனம் கிடைத்திருக்கும். மற்றவர்கள் அதன் பின்னரே வழிபாடு செய்திருப்பர். முண்டியடித்துச் சென்றால் அங்கே என்ன நடக்கும் என்பதை நம்மால் எளிதில் யூகிக்க முடியும்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சார்ந்த பிரச்சனையாக ஊடகங்களில் செய்தி வெளிவந்த பின்னணியிலாவது இப்பிரச்சனைக்கு முற்றுபுள்ளிவைக்க அரசும் நீதித்துறையும் முன்வரவேண்டுமெனக் கோருகிறேன். திருக்குட முழுக்கு நிகழ்வை கோயிலின் மேற்கூரையில் அமர்ந்து பார்த்தவர்களே மீண்டும் கருவறை வழிபாட்டிலும் பங்கேற்பது நியதியா? லட்சக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வெளியில் நின்றுகொண்டிருக்கும்போது பாஸ்பெற்று உள்ளே சென்றவர்கள் இரண்டுவகையான முன்னுரிமைகளையும் பெறுவது சரியன்று. இனிமேல் நடக்கும் திருக்குட முழுக்கு விழாகளில் கோபுரதரிசனத்தைக்கான பாஸ்பெற்றுச் சென்றவர்கள், அது முடிந்ததும் அப்படியே வெளியேற வேண்டும். கோபுரத்துக்கான நன்னீராட்டு முடிந்தவுடன் பொதுவழிபாட்டுக்கு காத்திருக்கும் மக்கள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கான விதிகளை இந்து அறநிலையத்துறையோ, நீதித்துறையோ உருவாக்க வேண்டும். தங்களுக்கான முன்னுரிமைகளை யாரும் எளிதில் இழப்பதில்லை. ஆனால் மனச்சான்றின்படி செயல்பட நினைப்பவர்களால் இவ்விதியை உருவாக்குவது கடினமில்லை.
- நீதித்துறை மற்றும் நிர்வாக ஒருங்கிணைவு
நானறிந்தவரை இந்த திருக்குட முழுக்கு நிகழ்வு குறித்து நீதித்துறைத் சார்ந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஆய்வுநடத்தி ஆலோசனை தந்துள்ளதாக அறிகிறேன். இதில் நல்ல விசயங்கள் இருக்கத்தான் செய்திருக்கும். அதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் அரசு நிர்வாகத்தின் முழுக்கவனமும் சிந்தனையும் நீதித்துறையைச் சார்ந்தவர்கள் கருத்துக்குப் பின்னால் நிற்பதே முதன்மையென மாறிவிடுகிறது. மக்களின் நலனை அதற்குரிய இடத்தில் முதன்மையாக வைத்து திட்டமிடுதல் இரண்டாம்பட்சமாகிவிடுகிறது. மதுரையில் நடக்கும் சமய விழாகளை சிறப்பாக்கவும் மக்கள் கண்ணோட்டத்திலிருந்து முறைபடுத்தவும் நீதித்துறைக்கு முக்கிய பங்குண்டு. அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்யவும் சிறப்பான வழிகாட்டலை உருவாக்கவும் முன்வரவேண்டுமெனக் கோருகிறேன். - தமிழ்வழி வழிபாட்டிற்கான இடம்
நான் முதல்முறை திருக்குட முழுக்கு விழாவில் பங்கேற்றேன். அதற்கு முதற் காரணம் தமிழ்வழி வழிபாடு திருக்குட முழுக்கின் தொடக்கம் முதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவில் தமிழ்வழி வழிபாடுகளும் தமிழ்ச்சைவ முறைமைகளும் உரிய இடம்பெற வேண்டும் என்ற குரல் நமது காலத்தின் குரல். எங்களது ஒவ்வொரு ஆய்வுக்கூட்டத்திலும் அதனை உறுதிப்படுத்துவதில் கவனமாக இருந்தோம். திருக்குட முழுக்கு விழாவின் தொடக்கம் முதல் இறுதிவரை தேவார, திருவாசகத்தின் தீந்தமிழ் பாசுரங்கள் முழங்கின. அதனை வருங்காலத்தில் மேலும் அதிகப்படுத்த வேண்டும். திருக்குட முழுக்கு நாளில் அதிகாலை சைவத்தமிழ் கோபுரமெங்கும் எதிரொலிக்கத் தொடங்கியதும் அதனை உறுதிப்படுத்திப் பதிவிட்டேன். - தமிழ்ச்சொல்களுக்கான இடம்
இத்திருவிழாவின் அழைப்பிதழில் சடங்குகள் குறித்து பெரும்பாலும் சமஸ்கிருத சொல்லாடல்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருந்தன. 2023ஆம் ஆண்டு நடைபெற்ற பழனி தண்டாயுதபானி திருக்கோவில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா அழைப்பிதழ் மிகச்சிறந்த முன்மாதிரியை உருவாக்கியது. அனைத்து சடங்குகளையும் கேள்விச்சாலை நிகழ்ச்சிகளையும் தமிழ்ப்படுத்தியிருந்தது. அப்பணியைச் சிறப்பாகச் செய்த அன்றைய பழனிக்கோவில் இணைஆணையர் திரு நடராஜன் அவர்களை அப்போது பாராட்டி மகிழ்ந்தேன். இப்போதும் பாராட்டுகிறேன். இந்து சமய அறநிலையத்துறை இதுபோன்ற சிறந்த மாற்றங்களை முழுதாக தனதாக்கிக்கொள்ள வேண்டும். வருங்காலங்களில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா அழைப்புகான சிறந்த முன்மாதிரியாக பழனி கோவில் திருக்குட முழுக்கு விழா அழைப்பிதழை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது பரிந்துரை.
மூன்று முக்கியப் பிரச்சனைகள்
பலவகைகளிலும் சிறப்பாக நடந்த இந்த விழாவில், மூன்று விசயங்கள் முக்கிய பிரச்சனையாக இருந்தன. நன்னீராட்டு தீர்த்தம் தெளிக்கபடாதது, சித்திரை வீதியில் மக்களை அனுமதிக்காதது, பொதுவழிபாடு பத்து மணிக்கு மேல் என தீர்மானித்தது.
தீர்த்தம் தெளிக்க தெளிவான திட்டமிடல் செய்யப்படவில்லை. அதற்கான பொறுப்பை அறநிலையத்துறை ஏற்கவேண்டும். வருங்காலத்தில் நடக்கும் விழாகளில் இக்குறை நிவர்த்திசெய்யப்பட வேண்டும்.
சித்திரைவீதியில் மக்கள் அனுமதிக்கபடாதற்கான முறையான காரணம் எதையும் என்னால் பெறமுடியவில்லை. காவல்துறையின் கட்டுப்பாட்டுக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு முற்றிலும் தவறானது.
திருக்குட முழுக்கு முடிந்தவுடன் உடனடியாக கோயிலின் மேற்புரமிருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்தேன். பத்து மணிக்குத்தான் பொதுவழிபாடு என்பதை மாற்றி, முன்கூட்டியே அனுமதிக்க வேண்டும் என்று கோரினோம். மாவட்ட அமைச்சரும் அந்தக் கோரிக்கையில் உறுதியாக இருந்தார். நாங்கள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்திற்கு பிறகு, காவல்துறை அதிகாரிகளை அதனை ஏற்றுக்கொண்டார்கள். பொதுவழிபாடு 8:45க்கு அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகே நான் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வெளியேறிச் சென்றேன்.
இரண்டு;
கோவில் என்பது ஆன்மீகம், கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்திருக்கிற திருத்தளம். அவற்றில் நடக்கிற ஒவ்வொரு திருப்பணியும் மேற்குறிப்பிட்ட அனைத்து துறைசார்ந்த கூருணர்வோடு செய்யப்பட வேண்டியது. கடந்த காலங்களில் அப்படிப்பட்ட தன்மையோடு நடந்த நல்ல முன்னுதாரணங்களும் உண்டு, மோசமான உதாரணங்களும் உண்டு.
நல்ல முன்னுதாரணங்கள்
சுதந்திரத்திற்குபின் நடந்த முதல் திருக்குட முழுக்கு நிகழ்வென்பது பத்மபீட தகட்டினை எடுத்து மருந்துசாத்தி சிறிய அளவில் திருக்குட முழுக்கு நடத்தலாம் என்றுதான் 1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கோயிலின் மேல்புறமிருந்து மழைநீர் ஒழுகுவதால் மேற்பரப்பில் கட்டுமானச் சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமாகக் கருதப்பட்டது. எனவே, மேல்தளத்தைச் சீரமைக்க முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்தளத்தை ஓரடி ஆழத்திற்கு இடித்து எடுத்துவிட்டு தளம் அமைக்கலாம்; ஆனால் அப்படி இடித்து எடுக்கும் போது பழமையான கட்டுமானம் சேதத்துக்கு உள்ளாகிவிடக் கூடாது. இருக்கும் தளத்தின் மேலே அப்படியே புதிய தளம் அமைப்பது கூடுதல் பாரத்தை உருவாக்கும். எனவே இரண்டும் அல்லாத புதியமுறை யோசிக்கப்பட்டது. நவீனமுறையில் தார்ச்சாக்குகளை பயன்படுத்தி, அதன்மேல் கனமேற்றாத வகையில் மேல்தளத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு தார்சாக்குகளை உருவாக்கும் பம்பாய் நிறுவனத்தின் பொறியாளர்கள் மேற்பார்வையில் அஃது உருவாக்கப்பட்டது. சிறிய அளவில் 1959இல் தொடங்கிய இப்பணி சுமார் 5 ஆண்டுகள் நீடித்து 1963இல் நிறைவுபெற்று சிறப்பாக நடந்தேறியுள்ளது.
கலை மற்றும் பொறியியல் துறையின் வளர்ச்சி மேற்கூரை மற்றும் கட்டுமானங்களைப் பாதுகாப்பதில் நல்ல முன்னேற்றங்களை உருவாக்க முடிந்தது. 1963ஆம் ஆண்டின் தொடர்ச்சியாக 1974ஆம் ஆண்டின் திருக்குட முழுக்கு நிகழ்வையொட்டி கட்டுமானப் புனரமைப்பு மேலும் சீர்படுத்தப்பட்டது. ஆன்மீகம், கலை, நவீன பொறியியல் ஆகியவை ஒருங்கிணைந்த செயல்பாடாக அது நடந்தேறியதை அறிய முடிகிறது. இந்த அணுகுமுறையின் தொடர்ச்சியாக இரண்டாயிரத்துக்குப் பின்னர் நடந்த முக்கியச் செயல் என்பது பொற்றாமரைக்குளத்தின் அடிவார மண் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டு, பெருமளவு நீரை உறிஞ்சாத களிமண் கொண்டு செய்யப்பட்ட புனரமைப்புப் பணியை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட முடியும்.
மோசமான முன்னுதாரணங்கள்
இவையெல்லாம் திருக்குட முழுக்கு சார்ந்த நல்ல முன்னுதாரணம் என்றால், இதற்கு எதிரான உதாரணங்களும் உண்டு, அதீத முயற்சியின் காரணமாக தாங்கள் நடத்தும் குடமுழுக்கை முன்னிட்டு சிமெண்ட் கட்டிடத்தை கோயிலுக்குள்ளே உருவாக்கினர்.
1995ஆம் ஆண்டு நடந்த திருக்குட முழுக்கின் போது கோயிலின் மேற்கூரையை அழகுபடுத்துவதாகச் சொல்லி பொற்றாமரைக்குளத்தை சுற்றி நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டிருந்த பழமையான வண்ணமூலிகை ஓவியங்கள் முழுவதையும் வெள்ளையடித்து அழித்தார்கள். ஒருபோதும் மறுவுருவாக்கம் செய்யமுடியாத பேரிழப்பாக அது நடந்து முடிந்துவிட்டது. இன்றளவும் ஓவியங்களை இழந்த அந்த பெருஞ்சுவர்கள் புதுப்பித்தலின் பேரிழப்பை நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றன. இந்நிகழ்வுக்குப் பிறகு கோயிலில் திருக்குட முழுக்குத் திருப்பணி என்றாலே முதலில் நம்மை தொற்றிக்கொள்வது பதற்றந்தான். புனரமைப்பு என்ற பெயரில் அழியப்போகும் மரபுச்செல்வம் என்னவோ என்ற கவலைதான்.
இந்நேரத்தில் இதற்கு முன்னர் நடந்த நல்லதையும் அல்லதையும் நினைவுகூர்வது முக்கியம் என்பதால் இதனைச் சொல்கிறேன்.
திருக்குட முழுக்குகளைப்பற்றிய பதிவுகள்
நவீன காலத்தில் 1877ஆம் ஆண்டு நடந்த குடமுழுக்கு நிகழ்வைப்பற்றிய பதிவோடு ஒப்பிடும்போது 1923ஆம் ஆண்டு திருக்குட முழுக்குப் பற்றிய பதிவு பெரிய அளவில் தென்படவில்லை. ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் இது குறித்து ஆய்வுசெய்து பதிவிடுவது முக்கியம்.
சுதந்திரத்திற்கு பின்னர் 1953ஆம் ஆண்டு திரு. பி.டி. இராஜன் தலைமையிலான குழு மிகச்சிறப்பாக குடமுழுக்கை நடத்தியுள்ளது. அத்திருப்பணிக்குழுவால் அம்மனுக்கு வைரகிரீடம் உருவாக்கி தரப்பட்டது. அதே போன்று 1974இல் லெ. நாராயணன் செட்டியார் தலைமையிலான குழுவினரால் முன்னதன் தொடர்ச்சியாக சிறப்பாக குடமுழுக்கை நடத்தியுள்ளனர். இக்குடமுழுக்கை முன்னிட்டு வெளியிடப்பட்ட மலர், கோவில் வரலாற்றுக்கு சூட்டப்பட்ட கிரீடங்களில் ஒன்று. இப்பணிக்காக இக்குழுவினர் என்றென்றும் நினைவுகூரப்படுவர்.
அன்றைய காலத்தில் ஆன்மீகம், கலை, இலக்கியம், வரலாறு, தொல்லியல் ஆகிய துறைகளில் ஆகச்சிறந்த மேதைகளாக இருந்த பலரும் இம்மலருக்கு பங்களித்திருக்கிறார்கள். வரலாற்று பேரறிஞர் கே.கே.பிள்ளையின் கட்டுரை தொடங்கி தமிழண்ணல் அவர்களின் கவிதை வரை இடம்பிடித்துள்ள மலர் அது. அண்ணல் காந்தியாரின் மீனாட்சி அம்மன் கோவில் வருகையில் தொடங்கி மதுரை நகரத்தின் உருவாக்கம் மற்றும் விரிவாக்கம் குறித்த கட்டுரை வரை அதில் இடம்பிடித்துள்ளன.
இம்மலரில்தான் “மதுரை கோவில் ஆபரணங்கள்” பற்றி திரு மு. தங்கவேல் தேசிகர் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. இன்றளவும் கோவில் ஆபரணங்களைப் பற்றி இதற்கு நிகரான ஒன்றை நான் வாசித்ததில்லை. இக்கட்டுரையில்தான் கோயிலில் உள்ள அத்தனை ஆபரணங்கள் பற்றிய ஆகச்சிறந்த செய்திகள் பதிவாகியுள்ளன. பாண்டிய நாட்டின் பேரடையாளமான முத்துகளின் வளமை பாதுகாக்கப்பட்டுள்ள இடமாக இத்திருத்தளம் உள்ளது.
கேப்பை அளவிலான சிறிய முத்துக்கள் தொடங்கி பலாக்கொட்டை அளவிலான பெரிய முத்துக்கள் வரை அனைத்தும் பதிவுசெய்யப்பட்டு உள்ளன. எழுந்தருளும் நாயகத்தின் முத்தங்கியில் சிறிய முத்துக்கள் பதிக்கப்பட்டு உள்ளது தொடங்கி அம்மன் கையில் உள்ள ஒற்றைக்கிளி பெரிய முத்துக்களால் ஆனது வரையிலான விவரங்கள் தரப்பட்டுள்ளன.
ரோமானியர் வழங்கிய தங்கக்காசு கோயிலில் உண்டு. ரோமமொழி பொறிக்கப்பட்ட 48காசுகள் 50தங்கமணிகளுடன் பட்டுகயிற்றால் கோர்க்கப்பட்டுள்ளதும் ஆங்கில கலெக்டர் ரோஸ்பீட்டர் அம்மனுக்கு வழங்கி திருவடிகள் பற்றிய முழுமையான குறிப்பும் காட்ச் சகோதரர்கள் தாங்கள் நடத்திய கப்பலுக்கு “எஸ். எஸ். எம் மீனாட்சி” என்று பெயரிட்டதும் அவர்கள் வழங்கிய “திருமஞ்சனக் கொப்பரை” பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ளன.
ஒரு திருக்குட முழுக்கு விழாவையொட்டி வெளியிட்ட மலர் ஆயிரமாண்டு நினைவுகளை தனது சமகாலத்துக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. சமூகம் கடந்த வந்த பாதைகளின் பல்வேறு பரிமானங்களை நினைவுபடுத்துகிறது. புனரமைப்பு என்பது கட்டுமானத்தில் மட்டுமன்று, சிந்தனையிலும் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது.
மக்கள்நலனே முதன்மையானது
பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்துள்ள பெருவிழா இது. இதில் சமகால அரசியல் முரண்கள் எல்லா வகையிலும் பிரதிபலிக்கத்தான் செய்யும்; பிரதிபலித்தன. அறநிலையத்துறைக்கும் அறங்காவலர்குழுவுக்கமான முரணில் திருக்குட முழுக்கு விழா சிக்கியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. இந்த முரண் குறித்த உரையாடல்கள் விழாவின் சிறப்புக்குப் பெருமை சேர்ப்பதாகாது. எனவே இது குறித்து விழா முடியும் வரை நான் கருத்தேதும் கூறவில்லை.
இறைவனின் மீதான நம்பிக்கையில் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிர்வாகக் குழறுபடிகள், அது சார்ந்த மேன்மையற்ற அரசியல்கள் எல்லாம் ஒரு பொருட்டன்று.
மக்களை முதன்மைப்படுத்தியே நிர்வாக ஒழுங்குகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதன் தேவையை இந்நிகழ்வு மீண்டும் வழியுறுத்தி உள்ளது. மதுரை, விழாகளின் நகரம். இந்தியாவில் உள்ள கோவில்களில் வருடத்தில் அதிக விழாகள் நடக்கும் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். கோவில் விழா மட்டுமன்று, உலகப்புகழ்பெற்ற ஜல்லிகட்டுகள் நடக்கும் இடமும் கூட.
இந்த அனைத்து விழாக்களிலும் மக்கள்நலனை மட்டுமே முதன்மைப்படுத்தி முடிவெடுக்கபட வேண்டும். அதற்கான படிப்பினைகளைச் சிறப்பாகத் தந்துள்ளது இந்தத் திருக்குட முழுக்கு விழா.
நக்கீரனின் நிலம். விமர்சனங்களும் விவாதங்களும் இன்றி முடிவாவது எதுவுமில்லை. நல்லதை ஏற்று அல்லதை நீக்குவோம். அன்புநிறைந்த ஆன்மீக மரபே மதுரையின் மண்ணின் செழிப்புற்ற அடையாளம் என்பதை நமது சமகாலம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது.
இப்பெருவிழாவுக்காக பங்களிப்பு செலுத்திய அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன்.



