தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் கண்ணாடிக்கடை முக்கு பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சின்னமனூர் நகர செயலாளர் பிச்சைக்கனி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் த.வெ.க ஆட்சியில் உள்ள அமைச்சர்களின் முகங்களை வைத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யால் பெயர் சொல்ல முடியுமா?
விஜய்யும், அஜித்தும் எதிரிகள் போல இருந்துகொண்டு, லண்டனில் கார் பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் சென்றபோது, அஜித்தை பார்த்தவுடன் ஓடிப்போய் விஜய் கட்டி அணைத்தார்” என்று கூறி மேடையிலேயே நடித்துக் காட்டினார்.
அதேபோல் கழகப் பேச்சாளர் வடுகபட்டி சுந்தரபாண்டியன் பேசியபோது சட்டமன்றத்தில் கன்னி பேச்சு கூட பேச தெரியாமல் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் கூட தெரியாத சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவை தேர்வு செய்துள்ளீர்கள் அதேபோல் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் பெரியகுளம் பகுதியில் விவசாயங்கள் பற்றி பேசுவார் என்று நினைத்தால் எனக்கு காதல் தோல்வி அடைந்தேன் நான் வேலையில்லாமல் இருந்தேன் எனக்கு எம்எல்ஏ வாக வேலை கொடுத்து காரும் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி என பேசினார் இப்படிப்பட்ட எம்எல்ஏக்களை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் நாராயணசாமி தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




