64 வீரர்கள் தங்களுடைய காரில் அணிவகுப்பு போட்டியை தொடங்கி வைத்த லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ். கோவையில் ப்ளூபேண்ட் எஃப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2026-27 தொடரின் 2-வது சுற்றான ப்ளூபேண்ட் ஸ்போர்ட்ஸ் கோயம்புத்தூர் ராலி 2026 போட்டி தொடங்கியது.

கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ராலி போட்டியின் தொடக்க விழா, கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த தேசிய அளவிலான ராலி போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 64 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க வந்துள்ளதாகவும், மோட்டார் விளையாட்டின் மீது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும், வயது பாகுபாடின்றி அனைவரும் இந்த விளையாட்டில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், கோவையில் நடைபெறும் இந்த ராலி போட்டிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். செய்தியாளர் சந்திப்பில் ராலி பந்தய வீரர்களான டீன் மஸ்கரென்ஹாஸ், கர்ணா கடூர், நவீன் புலிகில்லா, விஷாக் பி., பிரகதி கவுடா, அரவிந்த் தீரேந்திரா, தாருஷி விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ப்ளூபேண்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஃபிரெட்ரிக் விமல், இயக்குநர் பிரேம்நாத் காசிநாத், உலகளாவிய வணிகத் தலைவர் ஸ்வரூப் கே. சட்டோபாத்யாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



